திருவையாற்றுப் புராணம்

திருவையாற்றுப் புராணம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. இவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. திருவையாற்றுக் கோயில் பற்றிய புராணக் கதைகளை இவை கூறுகின்றன. ஒன்று ஞானக்கூத்தர் எழுதிய திருவையாற்றுப் புராணம். மற்றொன்று செப்பேசப் புராணம் என்னும் பெயராலும் குறிப்பிடப்படும் திருவையாற்றுப் புராணம்.

ஞானக்கூத்தர் எழுதிய திருவையாற்றுப் புராணம்

நிரம்ப அழகிய தேசிகரின் மாணாக்கருள் ஒருவராகிய அளகைச் சம்பந்தர் 1592-ல் திருவாரூர்ப் புராணம் பாடினார். இந்த நூலைப் பாடிய ஞானக்கூத்தரும் இந்த்த் தேசிகரின் மாணாக்கர் ஆதலால் இவரது காலமும் 16 ஆம் நூற்றாண்டு என்பதாகிறது.

இது அளவில் சிறியது.

  • பாடல் (எடுத்துக்காட்டு) [1]

செஞ்சடையார் புகழ் விளைத்துத் திருஞான நீர்த் தேக்கி
அஞ்சு களை அறுத்து உடனே சமணர்களை வேர் அறுத்து
பஞ்சநதிக் கயிலையினில் பயிர் விளைத்துப் புகலூரில்
தஞ்சம் முதல் கண்ட பிரான் சரண கமலம் போற்றி. [2]

செப்பேச புராணம் [3] [4]

திருவையாற்றில் அமர்ந்துகொண்டு தவம் செய்த சிலாதல முனிவருக்கு மண்ணில் கிடந்த செப்பில் செம்புப்பெட்டகத்தில் இறைவன் அருளால் ஒரு குழந்தை கிடைத்தது. செப்பில் கிடைத்த குழந்தைக்குச் செப்பேசன் எனப் பெயரிட்டனர். இந்தச் செப்பேசனுக்கு நந்திதேவரின் பெருமைகளைக் கூறும் செய்திகளைக் கொண்டது செப்பேச புராணம்.

இது 12 சருக்கங்களில் 437 பாடல்களைக் கொண்டுள்ளது. பாடல் (எடுத்துக்காட்டு) [5]

நடப்பன பறப்பனவும் நாரம் உறைவனவும்
கிடப்பனவும் நிற்பனவும் ஊர்வனவும் கேடு இல்
தடுப்பரு சராசரங்கள் தாங்களும் உடங்க்க்
கடப்பு அரிய சத்தி சிவம் ஆனநிலை கண்டார். [6]

மெய்யாறு புடை புரளத் திங்கள் ஓட, மேலோடப் பெரும்பாம்பு கிடந்து சீறக்
கையாறு காலேறிக் கீதம் பாடும் கடி கமழும் திருமுடிமேல் கன்னல் ஆறு
நெய் ஆறும் பால் ஆறும், பசுந்தேன் ஆறும் நிறை பசுவின் தயிர் ஆறும் நிறைய ஆட்டி
ஐயாறர் ஐயாறர் என்பார்க்கு அன்றோ அவனி எலாம் ஒரு குடைக்கீழ் ஆளல் ஆமே. [7]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  2. திருநாவுக்கரசரைப் போற்றும் பாடல்
  3. ஜப்பியேசுவரர் புராணம்
  4. பதிப்பு – திருவையாற்றுப் புராணம், அருணாசலக் கவிராயர் முத்துத் தாண்டவராயப் பிள்ளை பார்வை, 1930
  5. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  6. திருநாவுக்கரசர் கண்ட காட்சியினைக் கூறும் பாடல்.
  7. இவ்வூர்க் கோயிலிலுள்ள ஐயாறப்பனைப் பாடும் பாடல்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.