திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை

திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை (1900 – 25 நவம்பர் 1973) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார். தவில் – நாதசுவர இசையுலகில் லயப்பிண்டம் என இவரை மற்ற கலைஞர்கள் குறிப்பிட்டனர்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

முத்துவீர் பிள்ளை, தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயில் எனும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர்: தவிற் கலைஞர் நாராயணசுவாமி பிள்ளை – பொன்னம்மாள். ஆரம்பத்தில் தந்தையிடமிருந்து இசைப் பயிற்சி பெற்றுவந்த முத்துவீர் பிள்ளை, அம்மாசத்திரம் கண்ணுசுவாமி பிள்ளையிடம் ஏழாண்டுகள் தவில் கற்றுக் கொண்டார்.

இசை வாழ்க்கை

தனது 17ஆவது வயதில் நாதசுவரக் கச்சேரி ஒன்றில் முதன்முதலாக தவில் வாசித்தார். திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளையின் குழுவில் வாசித்துவந்த முத்துவீர் பிள்ளை, நாளடைவில் பிற கலைஞர்களுக்கும் தவில் வாசிக்கத் தொடங்கினார்.

டி. என். ராஜரத்தினம் பிள்ளை, செம்பொன்னார் கோவில் கோவிந்தசுவாமி பிள்ளை சகோதரர்கள், திருச்சேறை முத்துகிருஷ்ண பிள்ளை, ராஜாமடம் சண்முக சுந்தரம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள், இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை, திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை, வண்டிக்காரத் தெரு சுப்பிரமணிய பிள்ளை சகோதர்கள், தருமபுரம் அபிராமிசுந்தர பிள்ளை, அய்யம்பேட்டை வேணுகோபாலபிள்ளை ஆகியோருக்கு முத்துவீர் தவில் வாசித்துள்ளார்.

பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்

  • லயஞானத் தவில் மணி
  • 1964ஆம் ஆண்டில் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் கலாசிகாமணி விருது
  • டி. என். ராஜரத்தினம் பிள்ளை நினைவு நாள் விழாவில் வெள்ளிக் கேடயம்
  • கலைமாமணி விருது

மறைவு

திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, 25 நவம்பர் 1973 அன்று தனது 73ஆவது வயதில் காலமானார்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.