திருமண முறைகள் எட்டு
வடநூல் கூறும் திருமணம் எட்டு வகைப்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] அந்த எட்டு இவை என 7 ஆம் நூற்றாண்டு நூல் இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.[2]
சிவதருமோத்தர உரை மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ள இந்த எட்டுவகை மணம் பற்றிய பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்வகை மணம் பற்றித் தனித்தனியே விளக்கும் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இந்த 7 திருமண முறைகளின் பெயரை வடமொழிப் பெயர்களால் குறிப்பிடுகிறார்.
எண் | சிவதருமோத்தர உரை குறிப்பிடும் தமிழ்ப்பெயர் | வடமொழிப் பெயர் | இளம்பூரணர் விளக்கம் |
---|---|---|---|
1 | அறநிலை | பிரமம் [3] | கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியாய் இருப்பவன் ஒருவனுக்குத் தானமாகக் கொடுப்பது |
2 | ஒப்பு | பிரசாபத்தியம் [4] | பெண்வீட்டார் வேண்ட ஆண்வீட்டார் இசைந்து பெற்றோர் திருமணம் செய்து தருவது. |
3 | பொருள்கோள் | ஆரிடம் [5] | ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுத்துப் பெறும் திருமணம். |
4 | தெய்வம் | தெய்வம்[6] | வேள்வி செய்வோர் பலருள் ஒருவருக்குத் தன் மகளை வேள்வித் தீ முன் மணம் முடித்துத் தருவது. |
5 | யாழோர் கூட்டம் | கந்திருவம் [7] | ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம். |
6 | அரும்பொருள் வினை | அசுரம் [8] | வில்லேற்றினானாதல், திரிபன்றி எய்தானானாதல்கோடற்கு உரியான் எனக் கூறியவழி, அது செய்தார்க்குக் கொடுத்தல். |
7 | இராக்கதம் | இராக்கதம் [9] | தலைமகன் தன்னினும், தமரினும் பெறாது, வலுக்கட்டாயமாகப் பெண்ணை அடைதல். |
8 | பேய்நிலை | பைசாசம் [10] | கள்ளுண்டு களித்தார் மாட்டும், துயின்றார் மாட்டும் உடலின்பம் துய்த்தல். |
இவற்றில் தமிழர் களவுத் திருமண முறைமை
மேற்கோள்கள்
- மறையோர் தேஎத்து மன்றல் எட்டு – தொல்காப்பியம், களவியல், நூற்பா 1
- பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம்,
தைவம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,
பைசாசம் என வேதத்து எண்வகை மணமே - பிரமம் கன்னியைப் பொருங்கலன் அணிந்தே
பிரமசாரியாய் இருப்பான் ஒருவனுக்கு
உரிய வன்னிமுன் உதவுதல் மருவும் - மருவும் பிரசாபத்தியம் மகட் கோடற்கு
உரிய கோத்திரத்தார் மகள் உதவு என
இருமுது குரவரும் உவந்தே ஈதல் - ஈயும் ஆரிடம் ஆவும் ஆனேறும்
வாங்கித் தீமுன்னர் மகள் வழங்குதலே - வழங்கு தெய்வம் வேள்வி ஆசாரியற்கு
முழங்கு தீ முனம் மகட் கொடை முறையே - முறைமை யாழின் நிறை கந்திருவம்
ஒப்புப் பற்றும் தப்பு இலவாகித்
தாமே கூடும் தகுதியது ஆகும் - ஆகும் அசுரம் செரு வில் ஏற்றியும்
திரி பன்றியினைத் தெரிவுற எய்தும்
இன்னன பிறவும் பன்னிய செய்தும்
கன்னியை மன்னுதல் துன்னும் என்ப - துன்னும் இராக்கதம் சுரிகுழல் பேதையைத்
தன்னிற் பெறாதும் தமரிற் பெறாதும்
வலிதிற் கோடல் மரபு காட்டும் - காட்டு பைசாசம் களித்தார் துயின்றார்
மாட்டுப் புணரும் புணர்ச்சியின் மாண்பே - தொல்காப்பியம்
- இறையனார் களவியலுரை
- அவிநயம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.