தியெப்வால் நினைவுச்சின்னம்

தியெப்வால் நினைவுச்சின்னம் (Thiepval Memorial) எனப்படும் சோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம் என்பது, முதலாம் உலகப் போரின் போது சோம்மே என்னும் இடத்தில் இடம்பெற்ற சண்டையில் காணாமல் போன 72,195 பிரித்தானியாவையும், பிற பொதுநலவாய நாடுகளையும் சேர்ந்த படையினரின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும். இது பிரான்சில் பிக்கார்டியேயில் உள்ள தியெப்வால் என்னும் ஊரில் உள்ளது.

சோம்மேயில் காணாமல் போனோருக்கான தியெப்வால் நினைவுச்சின்னம்
பொதுநலவாய போர்க் கல்லறைகள் ஆணையம்

தியெப்வால் நினைவுச்சின்னம்
முதலாவது உலகப்போரில் இறந்து அறியப்பட்ட கல்லறைகள் இல்லாதோருக்காக
திறப்பு 31 சூலை 1932 இல் வேல்சு இளவரசர் எட்வர்டினால்
அமைவிடம் 50°3′2″N 2°41′9″E தியெப்வால், வடக்கு பிரான்சு
வடிவமைப்பு சர். எட்வின் லுட்யென்சு
மொத்த
நினைவு
கூரப்பட்டோர்
72,195
சூலை 1915 பெப்ரவரி 1918 நாட்களில் இடம்பெற்ற சோம்மே சண்டையில் வீழ்ந்துபட்டு, அவர்களுடைய பிற தோழர்களுக்குக் கிடைத்த மதிப்புக்குரிய அடக்கம் கிடைக்காமல்போன பிரித்தானியப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்களுடைய பெயர்கள் இங்கே பதியப்பட்டுள்ளன.
Statistics source: வார்ப்புரு:Cwgc cemetery

அமைவிடம்

இந்த நினைவுச் சின்னம், முன்னைய தியெப்வால் மாளிகை அமைந்திருந்த இடத்திலிருந்து தென் கிழக்கே 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம் மாளிகை தியெப்வால் காட்டுப் பகுதிக்கு அருகே தாழ் நிலப்பகுதியில் இருந்தது. மாளிகைப் பகுதியில் போர்க்காலத்தில் அமைந்திருந்த மருத்துவ மையங்களைச் சுற்றியிருந்த ஏராளமான கல்லறைகளை இடம் மாற்ற வேண்டும் என்பதனால், மாளிகை இருந்த இடம் நினைவுச் சின்னம் கட்டுவதற்குப் பொருத்தமில்லாது இருந்தது.

கட்டிடம்

நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டு போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட 16 தூண்களைக் கொண்டது. இது 150 அடி (46 மீ) உயரமானது. போர்க் காலத்தில் இப்பகுதியில் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் கட்டிடத்தைத் தாங்குவதற்கு 19 அடி (6 மீ) தடிப்புள்ள அத்திவாரம் அமைக்கவேண்டி இருந்தது. சர் எட்வின் லுட்யென்சு என்னும் கட்டிடக்கலைஞர் வடிவமைத்த இக் கட்டிடம் 1928 ஆம் ஆண்டுக்கும் 1932 ஆன் ஆண்டுக்கும் இடையில் கட்டி முடிக்கப்பட்டது. உலகிலுள்ள பிரித்தானியப் போர் நினைவுச் சின்னங்களில் பெரியது இதுவே ஆகும். பிற்காலத்தில் அரசர் எட்டாம் எட்வர்டான அப்போதைய வேல்சு இளவரசர், பிரான்சின் சனாதிபதி அல்பர்ட் லெப்ருன் முன்னிலையில் 1932 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.

பொறிப்பு

இந்நினைவுச் சின்னம் வேறு கல்லறைகள் இல்லாதவர்களும், காணாமற் போன அல்லது அடையாளம் காணப்படாத இறந்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்டது. உட்புற மேற்பரப்பில் பெரிய அளவில் பொறிப்புக்கள் உள்ளன. கட்டிடத்தின் நோக்கம் பற்றிய பொறிப்பு பின்வருமாறு:

சூலை 1915 பெப்ரவரி 1918 நாட்களில் இடம்பெற்ற சோம்மே சண்டையில் வீழ்ந்துபட்டு, அவர்களுடைய பிற தோழர்களுக்குக் கிடைத்த மதிப்புக்குரிய அடக்கம் கிடைக்காமல்போன பிரித்தானியப் படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்களுடைய பெயர்கள் இங்கே பதியப்பட்டுள்ளன.

போர்ட்லாந்துக் கற்கள் பதிக்கப்பட்ட தூண்களில் 72,000 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் சூலை 1916 க்கும் மார்ச் 1918 க்கும் இடையில் காணாமல் போனவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலோர் 1916 ஆம் ஆண்டில் சூலை முதலாம் தேதிக்கும், நவம்பர் நான்காம் தேதிக்கும் இடையில் இடம்பெற்ற முதற் சண்டைகளில் இறந்தவர்கள். இங்கு பெயர் பொறிக்கப்பட்டுள்ளவர்களில் எவரது எச்சங்களாவது பின்னர் கண்டுபிடிக்கப்படுமானால் அவர்களுக்கு உரிய படைத்துறை மரியாதைகளுடன் அவர்களுடைய ஊர்களுக்கு அண்மையில் அடக்கம் செய்தபின்னர், நினைவுச் சின்னத்தில் உள்ள அவர்களது பெயர் நீக்கப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.