திப்புத்தோளார்

திப்புத் தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. அது குறுந்தொகை நூலின் முதல் பாடலாக உள்ளது.

துப்பு என்னும் சொல் 'துப்புக் கெட்டவன்' என்று கூறும் வழக்கில் வலிமையைக் குறிப்பதை நாம் காண்கிறோம். இந்தத் துப்பு 'திப்பு' என்னும் சொல்லாலும் சங்ககாலத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. திப்புத்தோளர் என்றால் வலிமை மிக்க தோளை உடையவர் என்பது பொருள்.

பாடல் தரும் செய்தி

உயிரினங்களின் வாழ்க்கை உடலுறவில் இன்பம் காண்கிறது. இந்த இன்பம் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணை. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். முருகனின் பெருமை இந்தப் பாடலில் பேசப்படுவதால் குறுந்தொகை நூலுக்கே இந்தப் பாடல் முதல் பாடலாக வைக்கப்பட்டுள்ளது.

சேஎய் என்பவன் முருகன். அவன் யானைமேல் செல்கிறான். அவன் தன் காலிலே வீரத்தின் சின்னமாகக் கழல் அணிந்திருக்கிறான். அந்தக் காலால் அவுணர்களைத் தேய்த்துக் கொன்றான். அவன் ஏறிச் சென்ற யானையும் அவுணர்களைக் குத்திக் கொன்றது. அதனால் அதன் தந்தக் கொம்புகளும் சிவந்து காணப்பட்டன. அவுணர்களின் குருதி பாய்ந்ததால் போர்க்களமே செங்களமாக மாறியது.

இந்த முருகன் குன்றத்தில் தலைவி வாழ்கிறாளாம். முருகனைப் போலவே ஆறு இதழ்களுடன் செந்நிறத்துடன் பூத்திருக்கும் காந்தள் பூ அவள் மலையில் மிகுதியாக உள்ளனவாம். எனவே தலைவன் தலைவி அணிந்துகொள்ளும் பரிசுப் பொருளாக வழங்கும் காந்தள் பூ தொடுத்த தழையாடை தலைவிக்கு வேண்டாமாம்.

இவ்வாறு சொல்லித் தோழி தலைவன் தலைவிக்குத் தரும் கையுறையை ஏற்க மறுக்கிறாள். திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையும்படி எடுத்துரைக்கிறாள்.

  • கையுறை (இக்காலத்தில் கையூட்டு எனப்படுகிறது)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.