தலைவர் (துடுப்பாட்டம்)

ஓர் துடுப்பாட்ட அணியின் தலைவர் (captain) அணியில் ஓர் விளையாட்டுக்காரராக இருப்பதுடன், ஆட்டத்தின் போக்கினூடே பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தனக்காக்கப்பட்ட கூடுதல் பங்களிப்பையும் செய்பவராகும். மற்ற விளையாட்டுக்களைப் போன்றே துடுப்பாட்ட அணித்தலைவரும் கூடுதல் பட்டறிவு உள்ளவராகவும், சிறந்த பேச்சுவண்மை பெற்றவராகவும், அணியில் வழமையாக இடம்பெறக் கூடியவராகவும் இருப்பார். பொதுவாக அணியின் உறுப்பினர் தேர்வில் பங்கெடுக்கும் பொறுப்பும் உள்ளவராகிறார்.ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணிகளின் தலைவர்களும் நாணயச் சுண்டல் மூலம் எந்த அணி முதலில் மட்டை பிடிக்கத் துவங்கும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.ஆட்டம் நிகழ்கையில் தலைவர் மட்டையாளர்களின் களமிறங்கு வரிசையையும் ஒவ்வொரு "நிறைவு"( ஓவர்)க்கும் யார் பந்து வீசுவார்கள் என்பதையும் எந்தெந்த ஆட்டக்காரர்கள் எங்கெங்கு களத்தடுப்புப் பணியில் நிற்க வேண்டும் என்பதனையும் முடிவு செய்கிறார். தலைவரின் முடிவே இறுதியானது எனினும் பெரும்பான்மையான நேரங்களில் கூட்டு முடிவுகள் எடுக்கப்படுவதுண்டு. ஓர் துடுப்பாட்ட ஆட்டத்தின் நெளிவுசுளிவுகளைத் திறம்பட அறிந்து, ஆட்டநிலைக்குத் தக்கவாறும் எதிரணியின் பலவீனங்களைத் தாக்குமாறும் இவரெடுக்கும் முடிவுகள் அணியின் வெற்றி/தோல்வியை பாதிக்கின்றன. அணியின் உளவியல் வழியான நம்பிக்கையை வளர்ப்பதும் ஒற்றுமையை நிலைநாட்டுவதும் இவரது தலைமைப் பண்பை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.

நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஃபிளெமிங் களத்தடுப்பு இடங்களை ஒழுங்கு செய்கிறார்.

மற்ற விளையாட்டுக்களைப் போலன்றி துடுப்பாட்டத்தில் பயிற்றுனர் மற்றும் மேலாளரின் பங்கு ஆட்ட நிகழ்வின் ஊடே மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தால், மற்ற விளையாட்டுத் தலைவர்களை விட துடுப்பாட்டத் தலைவருக்கு வெற்றியில் பொறுப்பும் பங்கும் அதிகமாகும்.

அண்மைக்காலங்களில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், இருபது20 ஆட்டங்களில் கூடுதலாக துடுப்பாட்டத் தலைவர் ஆட்டவிதிமுறைகளை (ஆற்றல் ஆட்டம் (power play) எடுக்கின்ற வேளை, களத்தடுப்புக் கட்டுப்பாடுகள்,கட்டாயமான நிறைவுகள் போன்றவற்றை) செயலாக்கும் பொறுப்பும் உள்ளவராகிறார்.

துணைத் தலைவர்

தலைவருக்குத் துணையாகவும் தலைவர் களத்திலிருந்து நீங்கும்போது மாற்றாகவும் செயலாற்ற துணைத்தலைவர் நியமிக்கப்படுகிறார். சில அணிகளில் உதவித்தலைவரும் அணியின் தேர்வில் பங்கு கொள்கிறார். துணைத்தலைவர் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நிச்சயமில்லை.

தலைவரின் பல முடிவுகளில் இவரது பட்டறிவும் பங்கும் பெருமளவு உள்ளடங்கியுளது. ஒருநாள் போட்டிகளில் டக்வோர்த் லூயிஸ் முறையில் இரண்டாவதாக ஆடும் ஆணியின் வெற்றி இலக்கு நிலமைக்குத் தக்கவாறு மாறிவரும்போது, களத்தடுப்பு அணியின் தலைவர், தமது குவியம் ஆட்டத்திலிருந்து பிறழாதிருக்க, துணைத்தலைவரிடம் டக்வோர்த் லூயி கணக்குகள் அடங்கியத் தாளைக் கொடுத்து கவனித்துவரச் சொல்வது இயல்பு.

மேற்படிப்பிற்கு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.