தலையாட்டி பொம்மை

தஞ்சாவூர் பொம்மைகள் அல்லது தலையாட்டி பொம்மைகள் களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகள் ஆகும். தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை ஆகும். காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படும் இப்பொம்மைகள் உலகெங்கும் புகழ் பெற்றவை.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

பொம்மைகளின் சிறப்பு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைச் சாய்த்தாலும் கீழே விழாமல் ஆடும் வண்ணம் அமைக்கப்பட்ட அடிப்பாகம்

தலையாட்டி பொம்மை என்பது 'ராஜா' மற்றும் 'ராணி' இரண்டு பொம்மைகளையும் குறிக்கும். இந்த பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழேவிழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன.[1] ராஜா ராணி பொம்மைகள், நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் ஆகியவை தற்காலத்தில் உருவாக்கப்படுகின்றன.

வரலாறு

கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், நாடகம் போன்ற கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.

தயாரிக்கும் முறை

முதலில் அடிப்பாகம் தயரிக்கப்படுகிறது. வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் தூய களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாடகள் வெயிலிலும் உலரவைக்கப்படுகிறது. நிரப்பப்படும் களிமண்ணுக்கேற்பவே பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன. பின் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன. உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.

தற்போதைய பொம்மைகள்

தலையாட்டி பொம்மைகள்

அக்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றன. உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி உருவாக்கப்படுகின்றன. ஆடும் மாது, தாத்தா-பாட்டி ஆகியவை அதுபோல உருவாக்கப்படும் பொம்மைகளே. தற்போது பிளாஸ்டிக்கிலும் இந்த பொம்மைகள் விற்கப்படுகின்றன.

புவிக்குறியீட்டு எண்

பொருட்களுக்கான புவிக்குறியீட்டு சட்டம் 1999 ஆண்டு சட்டத்தின்படி தஞ்சாவூர் பொம்மைகள் தஞ்சையின் உரிமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. Physics Class 9. Pearson Education India. பக். 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8131728463.

வெளி இணைப்புகள்

  • [tamil.thehindu.com/opinion/reporter-page/தள்ளாட்டத்தில்-தஞ்சாவூர்-தலையாட்டி-பொம்மைகள்/article5224636.ece தள்ளாட்டத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்]
  • தலையாட்டி பொம்மை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.