தரு

கல்பித சங்கீதத்தில் ஒரு வகையைச் சேர்ந்தது தரு ஆகும். இசை நாட்டியங்கள், நாட்டிய நாடகங்களில் இவ்வுருப்படிகள் இடம் பெறுகின்றன. இவ் உருப்படியை கதைப்பாட்டு எனவும் அழைப்பர். தரு என்ற உருப்படியின் சாகித்தியம் சரித்திர சம்பந்தமானதாக அல்லது காதல் பாட்டாகவாவது இருக்கும். சில சமயங்களில் பிரபுக்களைப் புகழ்ந்து பாடுவதாகவும் இருக்கும். இதில் அதிக சாகித்தியங்கள் மத்திம கால நடையில் காணப்படும். இதில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய அங்கங்கள் காணப்படும். எனினும் சாதாரணமாக எல்லாத் தருக்களிலும் பல்லவி, அனுபல்லவி என்னும் இரு அம்சங்கள் மட்டுமே வருவதுண்டு. சரணங்கள் பலவற்றைக் கொண்டிருப்பது தருவின் மற்றொரு அம்சமாகும். தருக்களில் சிலவற்றில் இரண்டு அடிப் பாட்டுக்களாகவும், நான்கு அடிப் பாட்டுக்களாகவும் சொற்கட்டு சேர்ந்தவைகளாகவும் இருக்கின்றன. அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகத்தில் பல மொழிகளில் அமைகின்ற பல தருக்கள் காணப்படுகின்றன. தருக்களில் ஜதிகள் பொருத்தப்படுவதுண்டு. தருக்களில் பல வகைத் தருக்கள் உண்டு.

தருக்களின் வகைகளும் அவற்றின் விளக்கங்களும்

1. பிரவேசிக்க தரு :- நாட்டிய நாடகத்தின் ஆரம்பத்தில் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் வகையில் அமையும் பாடல்.


2.வர்ணனைத் தரு :- ஒரு நிகழ்ச்சி, இயற்கைக் காட்சி, ஒருவரின் பண்பு, ஆகியவற்றில் ஒன்றை வர்ணிப்பதாக அமைந்துள்ள பாடல். உ+ம் : இராம நாடகத்தில் மோகன இராகத்தில் அமைந்துள்ள கல்யாணத் தோகை அடித்த எனத் தொடங்கும் பாடல் சீதா தேவியின் திருமண நிகழ்ச்சிகளை சித்தரித்துக் காட்டுகின்றது.


3. சம்வாதத் தரு :- இருவருக்குள் நடக்கும் வாக்குவாதத்தை சாகித்தியத்தில் கொண்டிருக்கும் பாடல். உ+ம் : இராமநாடகத்தில் கல்யாணி இராகத்தில் மண்ணில் மெத்த அரசக்கோன் எனத் தொடங்கும் பாடல். இதில் இராமனுக்கும் பரசுராமனுக்கும் நடக்கும் தர்க்கத்தை விவரிக்கின்றது.


4. ஸ்வாகதத் தரு :- தனக்குத் தானே உரையாடிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ள பாடல்.


5. உத்தர பிரதி உத்தர தரு :- இருவருக்குள் நடக்கும் உரையாடலை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.


6. ஜக்கினித் தரு :- சாகித்தியத்தின் முதல் பகுதியில் ஜதிகளையும் அடுத்த பகுதியில் வார்த்தைகளையும் கொண்டு மத்திம காலப் பிரயோகங்களையும் கொண்டு அமைந்துள்ள தருக்கள் ஆகும்.


7. கோணங்கித் தரு :- தெய்வீகக் கோமாளி இசைக்கும் பாடல் கோணங்கித் தரு ஆகும். உ+ம் : தெய்வீகக் கோமாளி


8. கோலாட்டத் தரு :- கோலாட்டம் ஆடும் போது இசைக்கும் பாடல் கோலாட்டத் தரு ஆகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.