தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (Tamils Rehabilitation Organisation) இலாப நோக்கமற்ற, அரச சார்பற்ற நிவாரண நிறுவனமாகும். போர், இயற்கை அனர்த்தம்,ஆபத்து உதவிகள், மீள்கட்டுமானம், பொருளாதார வளர்ச்சி ஆகிய சேவைகளை இந்நிறுவனம் இலங்கையில் குறிப்பாக தமிழீழப் பகுதிகளில் வழங்கி வருகின்றது. 1984 ஆம் ஆண்டு தமிழகத்தில் ( இந்தியா)தமிழர்களால்,ஈழத்தமிழர்களால் உருவாக்கபப்ட்டது. தமிழர்களுக்காக உதவி வழங்கும் பன்னாட்டு கட்டமைப்பை கொண்ட நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இந் நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு கட்டமைப்பு அல்ல என்றும், தாம் அவர்களுடன் திட்டங்களில் சேர்ந்து பணியாற்றி மட்டுமே வருகின்றார்கள் என்று கூறி வரும் போதிலும், அமெரிக்கா, இலங்கை போன்ற சில நாடுகள் அக்கூற்றை முழுமையாக ஏற்க மறுக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுதலைப் புலிகளின் வழிநடத்தலுக்கு உட்பட்டே நடப்பதாக அமெரிக்க அறிக்கை ஒன்று சுட்டி காட்டியுள்ளது[1].

2002 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் பணி புரிந்து வந்துள்ளது. 2005 இல் இலங்கையின் அப்போதைய ஜனாதிபதியால் சுனாமி பேரழிவில் திறமையாக செயற்பட்டதற்காக அவாட் வழங்கப்பட்டது. இதே ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அமெரிக்க முன் நாள் அதிபர் ஆகியோரும் சுனாமி பேரனர்த்த செயற்பாட்டை பாராட்டினர்.[2] 2007 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கி கனக்கை முடக்கியது. இதே வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆதரவுடன் கிழக்கு மாகானத்தில் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் எழுவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.[3] இதனைத்தொடர்ந்து புனர்வாழ்வுக்கழகம் கொழும்பு மேல் நீதிமன்ரத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

2008 இல் அனைத்துலக புனர்வாழ்வுக்கழக நிறைவேற்று அதிகாரி திரு. கே.பி.றெஜி அவர்களை குற்றவாளி என அறிவித்த சிறிலங்கா அரசு அவருக்கு பிடி விறாந்து பிறப்பித்தது. 2009 முள்ளிவாய்க்கால் இறுதி சமர் வரை புனர்வாழ்வுக்கழகம் வன்னி மக்களுக்கு இறுதிவரை சேவையாற்றியது. அதன் பின்னர் 40 இற்கு மேற்பட்ட புனர்வாழ்வுகழகத்தினர் கொல்லப்பட்டனர். போர் முடிந்த கையுடன் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரண்டைந்த புனர்வாழ்வுக்கழக தலைவர் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அனைத்துலக அளவில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்காக திரட்டிய நிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை ஐக்கிய அமெரிக்கா முடக்கியுள்ளது[4].

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Tamil Tigers' foreign setback (பிபிசி)
  2. (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13927)
  3. (http://dbsjeyaraj.com/dbsj/archives/1187)
  4. புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா (புதினம்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.