தமிழர் உடை

தமிழரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், காலங்காலமாக உடுத்த உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை தமிழர் உடை என்ற கருத்தியலில் கருப்பொருள் ஆகின்றன. தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்து தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை.

Illustration of a sari-clad woman, c. 1847

இன்றைய தமிழர் உடைகள்

பெரும்பாலான நகரவாழ் தமிழ் ஆண்கள் நீள்சல்லடம் மற்றும் மேற்சட்டை உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வந்தாலும், தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இளம்பெண்கள் சுடிதார், சல்வார்-கமீஸ் அல்லது பஞ்சாபி உடை எனப்படும் வட இந்திய உடை உடுத்துவதே அதிகம் எனலாம். திருமணமான பெண்கள் பொது இடங்களுக்குப் பெரும்பாலும் புடவை அணிவர். சிற்றூர்களில் வாழும் ஆண்கள் பெரும்பாலும் வேட்டியும், பெண்கள் பெரும்பாலும் புடவையும் அணிவர். வயது வந்த இளம்பெண்கள் ஏறத்தாழ 20 வயது வரை தாவணி அணியும் வழக்கமும் உண்டு. சிறுமிகள் பாவாடை-சட்டை அணிவதும் வழக்கம். வேட்டியும் புடவையும் தமிழ் நிலப்பகுதிகளில் பொது இடங்களில் ஏற்புடைய கண்ணியமான உடையாக விளங்குகிறது. ஆண்கள் அலுவல் அல்லாத நேரங்களில், இரவில், ஓய்வு நேரங்களில் லுங்கி அணிவதுண்டு.

தமிழ உடை வரலாறு

"பண்டைய கோவில் சிற்பங்கள் ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும் சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலையால் மார்பை மறைப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் மார்பை மூடத்தக்கதாக நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப்போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்." [1]

"இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது." [2]

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது." [3]

உலகத்தமிழர் பேரமைப்பின் தமிழர் தேசிய உடைக்கான பரிந்துரை

ஆண்களுக்கு

ஒரு 1 செ.மீ அகலலமுள்ள கரையுடன் கூடிய வெள்ளைநிற வேட்டியும், சந்தன நிறத்தில் சிறிய கழுத்துப்பட்டியோடு கூடிய திறந்த முழுக்கைச் சட்டை மற்றும் விசிறி மடிப்பு அல்லது நெடுங்கரையுடன் கூடிய துண்டு (1 செ.மீ. அகலமுள்ள இருகோடுகள் இருக்கலாம்)

பெண்களுக்கு

7 செ.மீக்கு மேற்படாத அகலமுள்ள அரக்குக் கரைபோட்ட சந்தன நிறச் சேலையும் மற்றும் அரக்குநிற இரவிக்கையும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 40-41.
  2. செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 43-44.
  3. தொ. பரமசிவன். (2001). பண்பாட்டு அசைவுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

ஆராய்ச்சி கட்டுரைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.