தமிழரசன்

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

நக்சல் இயக்கத்தில்

தமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மசூம்தார் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[1] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்துவந்தார்.

கைது

மிசா காலகட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர்.[2] மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்

கருத்து வேறுபாடுகள்

தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர்.

மரணம்

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. 1987 செப்டம்பர் முதல் நாளன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[3] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழ் தேசிய தலைவர் தமிழரசன் மற்றும் நண்பர்கள் இறந்தனர்.[4]

எழுதிய நூல்கள்

  • சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் (1985)

வெளி இணைப்புகள்

  1. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71
  2. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104
  3. "வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்?". செய்திக்கட்டுரை. ஒன் இந்தியா (2000 ஆகத்து 23). பார்த்த நாள் 20 சூன் 2017.
  4. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.