தண்டனை அட்டை

தண்டனை அட்டை, தண்டனைச் சீட்டு அல்லது பெனால்ட்டி கார்டு (penalty card) பல விளையாட்டுக்களில் விளையாட்டாளர், பயிற்றுனர் அல்லது அணி அலுவலருக்கு எச்சரிக்கை விடுக்கவோ, கடிந்துரைக்கவோ, தண்டனை தரவோ மொழியற்ற முறையில் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஓர் விளையாட்டாளர் குற்றமிழைக்கும்போது அதனைச் சுட்டிக் காட்ட ஆட்டநடுவர்கள் தண்டனை அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். நடுவர் குற்றமிழைத்த விளையாட்டாளரை நோக்கியவாறோ சுட்டியபடியோ தனது தலைக்கு மேலே சீட்டைக் காண்பித்து அவருக்கு வழங்கப்படும் தண்டனையைத் தெரிவிப்பார். ஆட்ட அலுவலர் காட்டும் தண்டனை அட்டைகளின் வண்ணம் அல்லது வடிவத்தைக் கொண்டு குற்றத்தின் வகை அல்லது தீவிரம் வெளிப்படுவதோடு அதற்கான தண்டனை அளவும் தெரியப்படுத்தப்படுகிறது.

சங்கக் கால்பந்து ஆட்டமொன்றில் மஞ்சள் அட்டை காட்டப்படுதல்

சில நேரங்களில் விளையாட்டுத் தவிர மற்ற துறைகளிலும் இது பயனாகிறது. காட்டாக, சில வானொலிகளின் நேயர் பங்கேற்பு நிகழ்ச்சிகளில் விதியை மீறி பேசுவோருக்கு மஞ்சள் அட்டை தரப்படுவதைக் குறிக்கலாம்.[1]

வரலாறும் ஆரம்பமும்

அனைத்து மொழியினருக்கும் பொதுவான வகையில் வண்ண அட்டைகளைத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தும் எண்ணம் முதன்முதலில் பிரித்தானிய காற்பந்து நடுவர் கென் ஆசுட்டனுக்கு எழுந்தது.[2] பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் நடுவர்கள் குழுவிற்கு நியமிக்கப்பட்ட ஆசுட்டன் 1966 உலகக்கோப்பையின் அனைத்து நடுவர்களுக்கும் பொறுப்பாளராக பணியாற்றினார். இந்த உலகக்கோப்பையின் காலிறுதி ஆட்டமொன்று வெம்பிளி விளையாட்டரங்கில் இங்கிலாந்திற்கும் அர்கெந்தீனாவிற்கும் இடையே நடைபெற்றது. ஆட்டத்திற்குப் பின்னால் நாளிதழ்கள் பதிப்புகளில் ஆட்டநடுவர் ருடோல்ஃப் கிரீட்லென் அர்கெந்தீனா ஆட்டக்காரர் அன்டோனியோ ராட்டினை வெளியேற்றியது மட்டுமன்றி பாபி சார்லடன், ஜாக் சார்லடன் ஆகிய இருவரையும் எச்சரித்ததாக வெளிவந்தது. ஆட்டத்தின்போது நடுவர் தனது முடிவைத் தெளிவுபடுத்தவில்லை என இங்கிலாந்தின் மேலாளர் ஆல்ஃப் ராம்சே ஃபிஃபாவை நாடினார். இந்த நிகழ்வு ஆட்டநடுவரின் முடிவுகளை விளையாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவுறத் தெரியப்படுத்தும் வழிவகைகளைக் குறித்து ஆராய ஆசுட்டனைத் தூண்டியது. ஆசுட்டன் போக்குவரத்தில் பயன்படும் சைகை விளக்குகளை ஒட்டிய வண்ண அட்டைகள் (மஞ்சள் - எச்சரிக்கை, சிவப்பு - நிறுத்தம்) மொழி எல்லைகளைத் தாண்டி ஆட்டக்காரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒருசேர குற்றமிழைத்தவர் எச்சரிக்கப்பட்டாரா அல்லது வெளியேற்றப்பட்டாரா என்பதைத் தெளிவுபடுத்தும் என்றுணர்ந்தார்.[2] இதன் விளைவாக, மஞ்சள் அட்டைகள் எச்சரிக்கைக்காகவும் சிவப்பு அட்டைகள் வெளியேற்றத்தைக் குறிக்கவும் மெக்சிக்கோவில் நடந்த 1970 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டன. தண்டனை அட்டைகளைப் பயன்படுத்தும் இந்த முறைமையை விரைவிலேயே மற்ற பல விளையாட்டுக்களும் தங்கள் சட்டங்களுக்கேற்ப மாறுதல்களுடன் பின்பற்றத் தொடங்கின.

மஞ்சள் அட்டை
சிவப்பு அட்டை
ஹாக்கியில் தரப்படும் எச்சரிக்கை

தண்டனை  அட்டைகள்

மஞ்சள் நிற அட்டை

மஞ்சள் அட்டை ஆனது பல்வேறு விளையாட்டுகளில் உபயோகிகப்படும் தண்டனை அட்டை. விளையாட்டிற்கு ஏற்ப அதன் அர்த்தம் மாறுபடும். பொதுவாக ஒரு விளையாட்டு வீரரின் நடவடிக்கைகாக அவர்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை அல்லது தற்காலிக ஆட்ட நீக்கம் ஆக இருக்கலாம்.

சிவப்பு நிற அட்டை

சிவப்பு அட்டை பல்வேறு விளையாட்டுகளில் தண்டனை அட்டையாக வழங்கப்படினும் அதன்  அர்த்தம் ஆனது ஒரு விளையாட்டு வீரர் மோசமான தவறு இழைத்ததனால் அந்நபரை ஆட்டத்தை விட்டு நிரந்தரமாக   நீக்குதல் ஆகும்.

பச்சை நிற அட்டை

பச்சை அட்டையானது ஒரு சில விளையாட்டுகளில், விளையாட்டு வீரர் இழைத்த சிறிய தவுறுகளுக்கு (விபரீதமற்ற) வழங்கப்படும் முறையான  எச்சரிக்கை அட்டை ஆகும்.

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.