த. சுந்தரராசன்

த. சுந்தரராசன் (20 மார்ச்சு 1950) என்பவர் தமிழ்ப் புலவர், ஆசிரியர், எழுத்தாளர், நூலாசிரியர், தமிழ்ப் போராளி எனப் பல முகங்களைக் கொண்டவர். தலைநகர் தமிழ்ச் சங்கம் என்னும் ஓர் தமிழ் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் இவர் முகாமையானவர்.

பிறப்பும் கல்வியும்

கன்னியாகுமரி மாவட்டத்தில், சோணச்சு விளை என்னும் ஊரில் பிறந்த புலவர் சுந்தரராசன் பள்ளிக் கல்வியைக் குமரி மாவட்ட கல்வி நிலையங்களில் படித்தார். பின்னர் புலவர் பட்டம், இளங்கலைப் பட்டம் ஆகியவற்றைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். முதுகலைக் கல்வியை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். 37 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி 2008 ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார்.

தமிழ்ப் பணிகள்

சென்னை தலைநகர் தமிழ் சங்கம் 1981 இல் தொடங்கப்பட்டது. அது முதல் அச்சங்கத்தின் சார்பாகப் பல கருத்தரங்குகள் பட்டி மன்றங்கள், மாநாடுகள் நடத்தினார். தமிழ்க் கல்வி, தமிழ் ஆட்சி மொழி , தெருக்களில் தமிழ்ப் பலகை மாற்றம், ஈழத் தமிழர் ஆதரவு போன்ற கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எனத் தலைநகர் தமிழ்ச் சங்கம் நடத்தியதில் சுந்தரராசன் முன்னின்றார். பல முறை சிறைக்கும் சென்றுள்ளார். சென்னை வண்டலுரில் தலைநகர் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு பெரிய கட்டடம் உருவானதில் இவருக்கு பெரும் பங்கு இருந்தது. தமிழ் மொழி தொடர்பான நூல்கள் எழுதியுள்ளார். தலைநகர் தமிழ்ச் சங்கம் சார்பில் மக்கள் செங்கோல் என்னும் இதழின் ஆசிரியராக உள்ளார். குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியர் சிலை ஒன்று இவருடைய முன்னெடுப்பு முயற்சியால் 2016 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் பக்கலில் நிறுவப்பட்டது.[1]

சான்றாவணம்

முகம் இதழ், சூலை 2016

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.