டைஃபாய்டு மேரி

டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார்.

மேரி மலான்
Mary Mallon
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேரி
பிறப்புசெப்டம்பர் 23, 1869(1869-09-23)
குகுசுடவுன், டைரோன் கவுன்டி, அயர்லாந்து
இறப்புநவம்பர் 11, 1938(1938-11-11) (அகவை 69)
நோர்த் பிரதர் தீவு, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
நுரையீரல் அழற்சி
கல்லறைபுனித ரேமன்ட் இடுகாடு
இருப்பிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்பிறப்பால் ஐரியர்; அமெரிக்கர்
மற்ற பெயர்கள்மேரி பிறவுன்
இனம்ஐரியர்
பணிசமையற்காரர்
அறியப்படுவதுகுடற்காய்ச்சலின் அறிகுறிகளற்ற நோய்க்காவி

ஆரம்பகால வாழ்க்கை

மேரி மலான் 1869- ல் குக்ஸ்டவுன், கவுன்டி டைரோன், அயர்லாந்தில் பிறந்தாள். 1883-ல் அயர்லாந்தை விட்டு வெளியேறிய மேரி ஐக்கிய அமெரிக்காவில் குடிபுகுந்தாள். அப்பொழுது அவளுக்கு வயது 15.[2] தனது மாமா அத்தையுடன் சிறிது காலம் தங்கிய அவள் மிகுந்த வசதிபடைத்த குடும்பங்களில் சமையல்காரியாகப் பின்னாளில் வேலைக்குச் சேர்ந்தாள்.[3]

தொழில்

1900 ஆம் ஆண்டு முதல் 1907 வரை மலான் நியு யார்க் நகரப்பகுதிகளில் இருந்த ஏழு வெவ்வேறு குடும்பங்களில் சமையல்காரியாக வேலை பார்த்தாள்.[4] 1900-ல், மமரோனெக் டவுன், நியு யார்க்-ல் வேலை பார்த்தாள். அவள் வேலைக்குச்சேர்ந்த இரண்டு வாரங்களில், அங்கு வசித்தவர்கள் டைஃபாய்டு காய்ச்சலுக்கு உள்ளானார்கள்.1901-ல் மன்ஹாட்டன் நகரில் அவள் வேலை பார்த்த குடும்ப உறுப்பினர்களுக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. அதில் அந்த வீட்டிலிருந்த சலவைத்தொளிலாளி மரணமடைந்தாள். பிறகு மலான் ஒரு வழக்குரைஞர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். அங்கிருந்த எட்டு பேரில் ஏழு பேருக்குக் காய்ச்சல் வரவும் அவ்வீட்டைவிட்டு வெளியேறினாள்.[5]

Typhoid Mary in a 1909 newspaper illustration. Note the skulls she casts into the skillet.

1906-ல், ஆய்ஸ்டர் பே, லாங்க் ஐலண்ட்-ல் ஒரு வீட்டில் அவள் வேலைக்குச் சேர்ந்த இரண்டே வாரங்களில் அந்த குடும்ப உறுப்பினர்கள் பதினோரு பேரில் பத்து பேர் டைஃபாய்டு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தன் வேலைகளை அவள் மீண்டும் மாற்றினாள். மேலும் மூன்று குடும்பங்களில் இதைப்போன்ற நிகழ்வுகள் சம்பவித்தன.[5] சார்லஸ் ஹென்ரி வாரன் என்ற புகழ்பெற்ற பணக்காரரான நியு யார்கின் வங்கித் தொழிலினர் வீட்டில் சமையல்காரியாக வேலை பார்த்தாள். வாரன் 1906 ஆம் ஆண்டு கோடைகாலத்தைக் கழிப்பதற்காக ஆய்ஸ்டர் பே-யில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடியேறியபோது மலானும் அவர்களுடன் சென்றாள். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 3 வரை,அக்குடும்பத்திலிருந்த பதினோரு பேரில் ஆறு பேர் டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அக்காலத்தில் அங்கு பணியாற்றிய மூன்று மருத்துவர்கள் ஆய்ஸ்ட்டர் பே-யில் அந்நோய் "அசாதாரணமானது" என்று கருதினர். மலானை அடுத்தடுத்து வேலைக்குச்சேர்த்துக்கொண்ட குடும்பங்களில் டைஃபாய்டு திடீரெனத் தோன்றியது.[5]

புலனாய்வு

1906-ன் இறுதியில், ஒரு குடும்பம் ஜார்ஜ் சோபர் என்ற டைஃபாய்டு ஆராய்ச்சியாளரை விசாரணைக்காக நியமித்தது. அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பின் ஆய்விதழ்-ல் சோபர் ஜுன் மாதம் 15 ஆம் தேதி 1907 ஆம் ஆண்டு தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மலான்தான் இந்த திடீர் நோய்ப்பரவலுக்கு ஆதாரமனவள் என்று சோபர் நம்பினார்.[6] அவர் எழுதினார்:

"ஆகஸ்ட் 4 ஆம் தேதி அந்தக் குடும்பம் சமையல்காரியை மாற்றியது கண்டறியப்பட்டது. இது டைஃபாய்டு தொற்று பரவுவதற்கு ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு முன். அவள் அந்தக்குடும்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்திருக்கிறாள். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அங்கிருந்து சென்றுவிட்டாள். அந்த சமையல்காரி நாற்பது வயது மதிக்கத்தக்க உயரமான கனத்த திருமணமாகாத ஒரு ஐரிஷ் பெண்மணி. அவள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள்."

நோய்த்தொற்று ஏற்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சோபர் குறிப்பிட்டிருந்த உடல் தோற்றத்துடன் கூடிய ஐரிஷ் பெண்மணி சம்பந்தப்பட்டிருந்தாள் என்பதை சோபர் கண்டுபிடித்தார். அவளது இருப்பிடத்தை அவரால் கண்டறியமுடியவில்லை. ஏனென்றால், நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவது வழக்கமாக இருந்ததுதான். பார்க் அவென்யுவில் ஒரு கொட்டிலில் நோய்த்தொற்று ஏற்பட்டதையும் அங்கு மலான்தான் சமையல்காரி என்பதையும் கண்டுபிடித்தார் சோபர். அக்குடும்பத்தின் இரண்டு வேலைக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அக்குடும்பத்தினரின் மகள் டைஃபாய்டு காய்ச்சலால் இறந்து போனாள்.[5]

மலான்தான் டைஃபாய்டு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருக்கமுடியும் என்று கருதிய சோபர் அவளை அணுகியபோது, அவள் தனது மலம் மற்றும் மூத்திர மாதிரிகளை ஆய்வுக்குத்தர பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.[7] மலான் மாதிரிகளைத்தர மறுத்ததால், மலானின் ஐந்து வருட தொழிலைப்பற்றிய தகவல்களைத் தொகுக்க முடிவு செய்தார். மலானை சமையல்காரியாக வேலைக்கமர்த்திய எட்டு குடும்பங்களில் ஏழு குடும்பங்கள் டைஃபாய்டு தொற்றுக்குள்ளானது என்பதை சோபர் கண்டுபிடித்தார்.[8] அவர் அவளை அடுத்த முறை சந்தித்தபோது, அவர் தன்னுடன் மற்றொரு மருத்துவரை அழைத்துச்சென்றார். ஆனால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். மற்றொரு சமயத்தில், மலானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவளைச் சந்தித்த சோபர் அவர் ஒரு புத்தகம் எழுதி அதன் உரிமை முழுவதையும் அவளுக்கே தந்துவிடுவதாகவும் கூறினார். அவரது பரிந்துரையைக் கோபமாக நிராகரித்த அவள் குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். அவர் செல்லும்வரை வெளியே வரவேயில்லை.[9]

மேற்கோள்கள்

  1. "'Typhoid Mary' Dies Of A Stroke At 68. Carrier of Disease, Blamed for 51 Cases and 3 Deaths, but She Was Held Immune". த நியூயார்க் டைம்ஸ். நவம்பர் 12, 1938. http://select.nytimes.com/gst/abstract.html?res=F10D15FE3859117389DDAB0994D9415B888FF1D3. பார்த்த நாள்: பெப்ரவரி 28, 2010. "Mary Mallon, the first carrier of typhoid bacilli identified in America and consequently known as Typhoid Mary, died yesterday in Riverside Hospital on North Brother Island."
  2. Cliff, Andrew; Smallman-Raynor, Matthew (2013). Oxford Textbook of Infectious Disease Control: A Geographical Analysis from Medieval Quarantine to Global Eradication. Oxford University Press. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-199-59661-1.
  3. Kenny, Kevin (2014). The American Irish: A History. Routledge. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-317-88916-9.
  4. Job Readiness for Health Professionals: Soft Skills Strategies for Success. Elsevier Health Sciences. 2012. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-455-73771-2.
  5. Dex and McCaff, "Who was Typhoid Mary?" The Straight Dope. Aug 14, 2000
  6. Ochs, Ridgely (2007). "Dinner with Typhoid Mary". Newsday.
  7. Soper, George A. (June 15, 1907). "The work of a chronic typhoid germ distributor". J Am Med Assoc 48: 2019–22. doi:10.1001/jama.1907.25220500025002d.
  8. Satin, Morton (2007). Death in the Pot. New York: Prometheus Books. பக். 169.
  9. "The Most Dangerous Woman In America". Nova. PBS. No. 597. Event occurs at 28:42-29:52.Retrieved on August 31, 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.