டேனியல் கானமென்
டேனியல் கானமென் (Daniel Kahneman, எபிரேயம்: דניאל כהנמן, பிறப்பு: மார்ச் 5, 1934) என்பவர் ஒரு இசுரேலிய அமெரிக்க உளவியலாளர். தீர்ப்பு மற்றும் முடிவு செய்தலின் உளவியல், அத்துடன் நடத்தைசார் பொருளியல் ஆகியவற்றில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளியல் அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசை வெர்னான் எல். சிமித் என்பவருடன் இணைந்து பெற்றார்.
டேனியல் கானமென் | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 5, 1934 டெல் அவீவ், Mandatory Palestine |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் |
துறை | உளவியலாளர், பொருளியலாளர் |
பணியிடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் 1993– கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) 1986–93 University of British Columbia 1978–86 Center for Advanced Study in the Behavioral Sciences 1972–73 எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் 1961–77 |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) -முனைவர் (Ph.D), 1961 ஹீப்ரு பல்கலைக்கழகம் இளநிலை (B.A.), 1954 |
ஆய்வேடு | An analytical model of the semantic differential (1962) |
முனைவர் பட்ட மாணவர்கள் | எல்டார் ஷாபிர் |
அறியப்படுவது | அறிதல்சார் சாய்வு (Cognitive bias) நடத்தைசார் பொருளியல் (Behavioral economics) வளவாய்ப்புக் கோட்பாடு (Prospect theory) |
விருதுகள் | அமெரிக்க உளவியலாளர் சங்கத்தின் (APA) வாழ்நாள் சாதனையாளர் விருது (2007) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2002) அமெரிக்க உளவியல் சொசைட்டியின் சிறந்த அறிவியல் பங்களிப்பு விருது (1982) லூயிவில் பல்கலைக்கழகம் கிரேவ்மேயர் விருது (2003) |
வாழ்க்கை
டேனியல் கானெமன் டெல் அவீவ் நகரில் 1934இல் பிறந்தவர். இவரது குழந்தைப் பருவம் பிரான்சு நாட்டின் பாரீசில் கழிந்தது. இவர்கள் பாரீசில் இருந்தபோது 1940இல் ஜெர்மனியின் நாஜிக்கள் பாரீசைக் கைப்பற்றினர். போரில் பல்வேறு துன்பங்களைக் கண்டும், அனுபவித்தும் இறுதியில் டேனியல் கானெமெனின் குடும்பம் பிரிட்டனின் ஆட்சிப்பகுதியாக இருந்த அன்றைய பாலஸ்தீனத்திற்கு 1948 ஆம் ஆண்டில் சென்று சேர்ந்தனர். அதற்குக் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இஸ்ரேல் நாடு உருவாகி இருந்தது.
கல்வியும்,பணியும்
நாஜிக்கள் பிடியிலிருந்த பிரான்சில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் இவரை உளவியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. இதனால் இவர் 1954-ல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுநிலைப்பட்டமும், கணிதத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றார். பிறகு சிலகாலம் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் உளவியல் பிரிவில் பணிபுரிந்தார்.
1958-ல் பெர்கெலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். 1961இல் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் உளவியலில் விரிவுரையாளராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கினார். பொருளாதார ரீதியான முடிவுகளால் ஏற்படும் உளவியல் ரீதியான தாக்கங்கள் (பிஹேவியரியல் எகனாமிக்ஸ் - Behavioral Economics) தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
இவற்றுக்கான கோட்பாடுகளை நிறுவினார். இதற்காக இவருக்கு 2002-ல் வெர்னான் எல். ஸ்மித்துடன் இணைந்து நோபல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அமோஸ் டிவெர்ஸ்கி மற்றும் பிறருடன் இணைந்து கானமென், தீர்வு விதிகள் மற்றும் தவறான எண்ணங்கள் மூலம் எழும் பொதுவான மனித தவறுகளின் அறிவாற்றலின் அடிப்படையை நிறுவினார்.
நவீன பொருளாதாரக் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்யவைத்த இவரது தீவிரமான சிந்தனைகள் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. 2011-ல் ஃபாரின் பாலிசி இதழில் உலக தலைசிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றது.[1]
அதே ஆண்டில் இவரது ஆராய்ச்சிகளின் சுருக்கமான தொகுப்புகளை உள்ளடக்கிய திங்க்கிங், ஃபாஸ்ட் அன்ட் ஸ்லோ புத்தகம் வெளிவந்து அமோக விற்பனையானது.[2] பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வுட்ரோ வில்சன் ஸ்கூலில் உளவியல் மற்றும் பொது விவகாரங்கள் பேராசிரியராக பணிபுரிந்தார். 2014 ஆண்டைய தி எகனாமிக் இதழ் உலகின் செல்வாக்கு மிக்க பொருளாதார அறிஞர்களில் 15ஆம் இடத்தை இவருக்கு வழங்கியது.[3]
மிஷிகன் பல்கலைக்கழகத்திலும், கேம்பிரிட்ஜில் அப்ளைய்டு சைக்காலஜி ரிசர்ச் யூனிட்டிலும் வருகை அறிவியலாளராகப் பணி புரிந்தார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உளவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
இவர் தனியாகவும் டவெர்ஸ்கியுடன் இணைந்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் கட்டுரை பிலீஃப் இன் தி லா ஆஃப் ஸ்மால் நம்பர்ஸ். 1978-ல் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பணியை விட்டு விலகி கொலம்பியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டனில் சேர்ந்தார்.
நோபல் நினைவு பரிசு தவிர, 2007இல் அமெரிக்க உளவியல் அமைப்பின் வாழ்நாள் பங்களிப்பாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பரிசுகளையும் வென்றுள்ளார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கின.
தனது புத்தகங்களுக்காகவும் பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார். பேராசிரியராகவும் உளவியல் ஆராய்ச்சியாளராகவும் தன் பணிகளைத் தொடர்கிறார்.
மேற்கோள்
- "The FP Top 100 Global Thinkers. 71 Daniel Kahneman". foreignpolicy.com (November 28, 2011). பார்த்த நாள் November 3, 2012.
- "The New York Times Best Seller List – December 25, 2011". பார்த்த நாள் 2014-08-17.
- http://www.economist.com/news/finance-and-economics/21637412-economists-academic-rankings-and-media-influence-vary-wildly-shifting-clout?fsrc=scn/tw/te/pe/shiftingclout