டானியல் அன்ரனி

டானியல் அன்ரனி (13 சூலை 1947 - மார்ச் 17, 1993) ஈழத்து சிறுகதை எழுத்தாளர் ஆவார்.[1]

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சாதாரண உழைப்பாளர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் டானியல் அன்ரனி. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். ஆரம்பத்தில் ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதி வந்தார். பின்னர் முற்போக்கான கதைகளை, தான் வாழ்ந்த கடல்-சார் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதலானார். மல்லிகை, வீரகேசரி, சிரித்திரன், கணையாழி போன்ற இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்தன. வேறு சில இலக்கிய நண்பர்களுடன் இணைந்து 1970களில் "செம்மலர்" என்ற பெயரில் இலக்கிய வட்டம் ஒன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து செயற்படலானார். இவ்வட்டத்துடன் விரைவில் வ. ஐ. ச. ஜெயபாலன், நந்தினி சேவியர், உ. சேரன், போன்றோர் இணைந்தனர். வட்டம் சார்பில் அணு என்ற இலக்கிய இதழை வெளியிட்டனர். இது மூன்று இதழ்களுடன் நின்று போனது.[1]

பின்னர் சமர் என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.[2] இவ்விதழில் க. கைலாசபதி, சாந்தன், முருகையன், கே. எஸ். சிவகுமாரன் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் எழுதினர். தொடர்ந்து எட்டு இதழ்கள் வெளிவந்து நின்று விட்டது.[1]

வெளியிட்ட நூல்கள்

  • வலை (சிறுகதைத் தொகுதி, 1984)

மறைவு

டானியல் அன்ரனி தனது 47வது அகவையில் 1993 மார்ச் 17 இல் காலமானார்.

மேற்கோள்கள்

  1. கிருஷ்ணமூர்த்தி, சசி (மே 1994). "டானியல் அன்ரனி ஓர் அஞ்சலிக் குறிப்பு". மல்லிகை (245): பக். 4-6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_1994.05.
  2. வல்லிக்கண்ணன் (2004). வல்லிக்கண்ணன் கட்டுரைகள். கோடம்பாக்கம்: அர்ச்சுனா பதிப்பகம். பக். 75.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.