ஜோர்ஜ் சந்திரசேகரன்

ஜோர்ஜ் சந்திரசேகரன் (1940 - ஜூன் 6, 2008) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பணி புரிந்தவர். கொழும்பில் பிறந்த இவர் கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ட் கல்லூரியில் பயின்றவர். 1968ல் இருந்து 1996ல் ஓய்வு பெறும் வரை அறிவிப்பாளராக செயற்பட்டார்.

ஜோர்ஜ் சந்திரசேகரன்

கலை,இலக்கியத்துறை

வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் நடித்தவர். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இலங்கை வானொலி தேசிய சேவையில் உரைச்சித்திரம் என்ற வாராந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். தினகரன், வீரகேசரி, செய்தி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியவர். சஞ்சிகைகளில், ஓவியங்கள், கார்ட்டூன் தொடர்கள் வரைந்தவர். மேனாட்டு இலக்கியங்களில் மிகுந்த புலமை உள்ளவர்.

மிக நீண்ட நேரமாக அதாவது 35 நிமிடங்கள் இடைவிடாது தொடர்ச்சியாக செய்தி அறிக்கையை வாசித்த சாதனைக்குரியவராகவும் ஜோர்ஜ் சந்திரசேகரன் விளங்கினார்.

புகழ் தந்த மேடை நாடகங்கள்

  • ஆபிரகாம் கோவூரின் உண்மைக்கதையைத் தழுவி வரணியூரான் எழுதிய "நம்பிக்கை" மேடை நாடகத்தில் "கோவூராக" நடித்து பாராட்டுப் பெற்றார்.
  • 1993-இல் கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற நாடகவிழாவில் இடம் பெற்ற இயூஜின் அயனஸ்கோவின் " நத்தையும் ஆமையும்" என்ற நாடகம், இவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இயக்கி, கே. எஸ். பாலச்சந்திரன், செல்வி. ஞானரட்னம் ஆகியோர் நடித்து மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பை பெற்றது.

எழுதிய நூல்கள்

  • ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் (1995-ம் ஆண்டுக்கான சாகித்திய விருது பெற்றது)
  • அபத்த நாடகம் (நத்தையும் ஆமையும், மொழிபெயர்ப்பு நாடகம்)
  • ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் (வாழ்க்கை அனுபவங்கள்)

மறைவு

ஜோர்ஜ் சந்திரசேகரன் தனது 68-வது அகவையில் 2008-ஆம் ஆண்டு ஜூன் 6ந் திகதி வெள்ளிக்கிழமையன்று கொழும்பில் காலமானார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.