யூனோ (விண்கலம்)
யூனோ (Juno, ஜூனோ) என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வியாழன் கோளுக்கான ஒரு விண்வெளித் திட்டம். யூனோ விண்கலம் 2011 ஆகத்து 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 12:25 மணிக்கு ஏவப்பட்டது[2].
![]() வியாழக் கிரகத்தில் யூனோ உள்ள காட்சி ஓவியரின் கைவண்ணத்தில். | |
இயக்குபவர் | நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | இலாக்கீடு மார்ட்டின் கார்ப்பரேசன் |
திட்ட வகை | விண்சுற்றுக் கலன் |
அணுகிய விண்பொருள் | பூமி |
செயற்கைக்கோள் | வியாழன் |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | ஆகத்து 2016[1] |
சுற்றுப்பாதைகள் | 33 |
ஏவப்பட்ட நாள் | ஆகத்து 5, 2011[1] |
ஏவுகலம் | அட்லசு வி 551 |
ஏவு தளம் | கேப் கேனவரல், புளோரிடா |
திட்டக் காலம் | 6 பூமி ஆண்டுகள் |
தே.வி.அ.த.மை எண் | JUNO |
இணைய தளம் | www.nasa.gov/juno |
நிறை | 3625 கிகி[1] |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | முனைவு |
அண்மைநிலை | 4,300 கிமீ |
யூனோ விண்கலம் செவ்வாய்க் கோளைத் தாண்டி வியாழனின் சுற்று வட்டத்தை ஆகத்து 2016 இல் அடையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு முன்பே சூலை 2016 இல் இலக்கை அடைந்தது.[3][4]
நோக்கம்
வியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும். வியாழனுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல விருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும்.

செலவு
இவ்விண்கலத்திட்டம் ஆரம்பத்தில் 2009 சூன் மாதத்தில் ஏவுவதற்காக 700 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், நாசாவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் ஆகத்து 2011 இற்குப் பின்போடப்பட்டது. தற்போது இதன் மொத்தச் செலவீனம் $1.1 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]
வியாழன் கோளை அடைந்த விண்கலம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் இணைந்தது.
வியாழனை நோக்கிப் பயணித்த அந்த கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பாற்றல் மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. அதன் பின் அது வியாழனின் ஈர்ப்பாற்றலால் கவரப்ப்பெற்று, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது. ஏறக்குறைய 800 மில்லியன் கிமீ தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலிக் குறிப்பலைகளை யூனோ பூமிக்கு அனுப்பியது. [6].
நாசாவின் நியூ ஃபுரொண்டியர்சு வகைத் திட்டத்தில் யூனோ இரண்டாவது விண்கலம் ஆகும். முதலாவது விண்கலம் நியூ ஹரைசன்ஸ் 2006 ஆம் ஆண்டில் புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது. இது புளூட்டோவை 2015 இல் அடையும்.
கலிலியோ தகடும் இலேகோ உருவப் பொம்மைகளும்

கலிலியோ கலிலியின் நினைவாக யூனோ அவரது கையினால் எழுதப்பட்ட தகடொன்றை வியாழனுக்கு சுமந்து செல்கிறது. இது இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாகும். கலிலியோ கலிலியின் உருவத்துடன் 1610ல் அவரது கைப்பட எழுதப்பட்ட வாசகத்தையும் இது கொண்டுள்ளது..[7]
அத்துடன் ஜுனோ மூன்று லெகோ உருவ பொம்மைகளையும் சுமந்து செல்கிறது. அவை கலிலியோ, உரோமக் கடவுளர்களாகக் கருதப்படும் வியாழனும் (சூப்பிட்டர்) அவரது மனைவியுமான ஜுனோ. உரோமப் புராணப்படி, உரோமக் கடவுளான வியாழன் தனது தவறுகளை மறைப்பதற்காக தன்னைச் சுற்றி மேகங்களால் மறைப்பொன்றை ஏற்படுத்தினான். வியாழனின் மனைவி யூனோ, மேகங்களினூடாக உற்று நோக்கி அவனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தினாள் என்று கூறப்படுகிறது. யூனோ பொம்மை உண்மையை துலக்குவதற்காக உருப்பெருக்கி கண்ணாடி ஒன்றையும், வியாழன் மின்னல் வேலையும், கலிலியோ பொம்மை அவரது தொலைநோக்கிக் கருவியையும்உ கொண்டுள்ளன.[8][9]
மேற்கோள்கள்
- "Juno Mission to Jupiter" 2. NASA (04/09). பார்த்த நாள் April 05, 2011.
- Chang, Kenneth (July 5, 2016). "NASA’s Juno Spacecraft Enters Jupiter’s Orbit". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/07/05/science/juno-enters-jupiters-orbit-capping-5-year-voyage.html. பார்த்த நாள்: July 5, 2016.
- Chang, Kenneth (June 28, 2016). "NASA’s Juno Spacecraft Will Soon Be in Jupiter’s Grip". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/06/28/science/nasa-jupiter-juno.html. பார்த்த நாள்: June 30, 2016.
- Cureton, Emily Jo (June 9, 2011). "Scientist with area ties to study Jupiter up close and personal". Big Bend Now. பார்த்த நாள் 17 July 2011.
- "வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது யூனோ". பிபிசி தமிழ் (5 சூலை 2016). பார்த்த நாள் 5 சூலை 2016.
- "Juno Jupiter Mission to Carry Plaque Dedicated to Galileo". நாசா (ஆகத்து 3, 2011). பார்த்த நாள் ஆகத்து 5, 2011.
- "Juno Spacecraft to Carry Three Lego minifigures to Jupiter Orbit". நாசா (ஆகத்து 3, 2011). பார்த்த நாள் ஆகத்து 5, 2011.
- Peter Pachal (ஆகத்து 5, 2011). "Jupiter Probe Successfully Launches With Lego On Board". PC Magazine. http://www.pcmag.com/article2/0,2817,2390527,00.asp.
வெளி இணைப்புகள்
- Official web site on NASA.gov
- Juno mission web site on South West Research Institute