யாவாக்கிறிட்டு

ஜாவாஸ்க்ரிப்ட் (Java Script) என்பது வலைத்தளங்களில் பயனர் தரப்பிலிருந்து வழங்கப்படும் உள்ளீடுகளை உறுதி செய்வதற்குப் பரவலாகப் பயன்படும் ஒரு கணினி நிரல் மொழி ஆகும். பயனர் பக்கச் செயற்பாடுகள் யாவாக்கிறிட்டினால் பெரிதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 1995ஆம் ஆண்டு நெற்சுக்கேப் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிக்குத் தற்போது மிகவும் விருத்தி பெற்ற மென்பொருள் கட்டமைப்புகள் உள்ளன. சேகுவெரி, மொடூல்சு, கூகுள் வலைக் கருவிப்பெட்டி போன்றவை பரவலான பயன்பாட்டில் இருக்கும் யாவாக்கிறிட்டுக் கட்டமைப்புகள் ஆகும். பெயரில் ஒத்த யாவா நிரல் மொழிக்கும் இதற்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை.

வரலாறு

ஆரம்பத்தில் நெற்சுக்கேப் நிறுவனத்தால் இலைவு கிறிட்டு(Live Script) என அறிமுகம் செய்யப்பட்ட மொழியே யாவாக்கிறிட்டு எனப் பெயர் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பெயரின் தெரிவே இன்று வரை பல குழப்பங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்பெயர் சன் மைக்ரோசிசுட்டத்தின் காப்புரிமைப் பெயராகும். பிற்காலத்தில் மைக்ரோசாப்டு யாவாக்கிறிட்டிற்குப் போட்டியாக சேகிறிட்டு என்ற நிரலாக்க மொழியை உருவாக்கியது.

யாவாக்கிறிட்டும் யாவாவும்

இதேவேளையில், சன் மைக்ரோ சிசுட்டம் (Sun Micro systems) யாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. யாவா விரைவில் பிரபலமாகிப் பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெற்சுக்கேப் நிறுவனமும் தமது நெற்சுக்கேப் 2.0 பதிப்பில் யாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது இலைவு கிறிட்டு என்ற மொழியை யாவாக்கிறிட்டு (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக யாவாக்கிறிட்டு மொழி பலரது கவனத்தில் பட்டது. இதைத்தவிர யாவாவிற்கும் யாவாக்கிறிட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதைய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயன்பாடு

  • பயனர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள் சரியா என்பதை உலாவியூடாகவே சரிபாத்துப் பின்னர் வழங்கியில் சேமிக்கும் வசதி
  • உரையாடல் பெட்டி மற்றும் மேல் மீட்புப் பெட்டிச் சாளரங்களை உருவாக்குதல்
  • பயனர்களின் சுட்டி அசைவுகளிற்குத் துலங்கலைக் காட்டுதல். எ-டு: படங்களிற்கு மேலாகச் சுட்டி செல்லும் போது படங்களை மாற்றுதல்
  • யாவாக்கிறிட்டில் தொகுப்பிகளைப் பயன்படுத்துவது இல்லை. நிரலை எழுதிய உடன் உலாவியில் சோதித்துப் பார்க்கலாம்.

யாவாக்கிறிட்டில் தமிழ்

யாவாக்கிறிட்டில் தமிழைப் பயன்படுத்தத் தமிழ்ச் செய்தியை ஒருங்குறியில் தட்டச்சுச் செய்துப் பின்னர் கோப்பை யு.டி.எவ்.-8 (UTF-8) முறையில் சேமிக்க வேண்டும். உலாவிகள் அவற்றைத் தமிழில் காட்டும்.

<script type="text/javascript">
alert('சோதனைச் செய்தி')
</script>

தொகுப்பிகள்

யாவாக்கிறிட்டைப் பலதரப்பட்ட தொகுப்பிகளில் தொகுக்கலாம். இணையத்தில் உடனடியாக யாவாக்கிறிட்டைப் பரிசோதிக்க சே. எசு. பின்னைப் பயன்படுத்தலாம்.[1]

மொழி அமைப்பு

யாவாக்கிறிட்டை மீப்பாடக்குறிமொழியில் இடல்

பொதுவாக யாவாக்கிறிட்டை மீப்பாடக் குறிமொழியின் தலைப்பில் இடுவர். அதாவது பின்வருமாறு:

<html>
<head>
<script type="text/javascript"> 
யாவாக்கிறிட்டு இங்கே இடப்படும்....
</script>
</head>
<body></body></html>

ஆனால் பக்கம் தரவேறிய பின்னர் யாவாக்கிறிட்டு தரவேறினால் போதும் என்றால் அதை உடலில் இதே போன்று மீப்பாடக் குறிமொழியின் உடலிலும் போடலாம்.

யாவாக்கிறிட்டை ஒரு வெளிக் கோப்பாக இணைக்கலாம். தலைப்புகளை அடையாள ஒட்டுகளுக்கு இடையே <script src="filename"> </script> என்று இணைக்கலாம்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.