சோதனைக் குழாய்

சோதனைக் குழாய் (Test Tube) என்பது, ஆய்வுகூடங்களில் பயன்படும் சிறிய குழாய் வடிவக் கொள்கலம் ஆகும். இதன் மேற்பகுதி திறந்தும், அடிப்பகுதி பெரும்பாலும் வளைவானதாகவும் இருக்கும். திறந்த மேற்பகுதி பொதுவாக வெளிப்புறம் வளைந்த விளிம்பு கொண்டதாக இருக்கும். இவ்வமைப்பு உள்ளேயிருக்கும் நீர்மங்களைப் பாதுகாப்பாக வேறு கலங்களில் ஊற்றுவதற்கு வசதியானது.

சோதனைக் குழாய்த் தாங்கியில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சோதனைக் குழாய்கள்.

பல விதமான தேவைகளை நிறைவேற்றுவதற்காக, சோதனைக் குழாய்கள், பல்வேறு நீள, அகலங்களில் உருவாக்கப்படுகின்றன. ஆய்வுகூடச் சோதனைகளின்போது, வெவ்வேறான வேதிப் பொருள் மாதிரிகளை, பெரும்பாலும் நீர்ம மாதிரிகளை, வைத்திருப்பதற்கு இது பயன்படுகிறது. வேதியியற் சோதனைகளின்போது உள்ளேயுள்ள பொருட்களை இலகுவாகச் சூடாக்குவதற்கு வசதியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சூடாக்கும்போது வெப்பத்தினால் வரிவடைந்து உடையாமல் இருப்பதற்காகப் பைரெக்ஸ் வகைக் கண்ணாடியால் செய்யப்படுகின்ற சோதனைக் குழாய்களை, பன்சன் சுடரடுப்பின் சுவாலையில் பிடித்துச் சூடாக்க முடியும். நீண்ட நேரம் மாதிரிகளைச் சூடாக்க வேண்டியிருக்கும்போது, சோதனைக் குழாய்களைவிடக் கொதி குழாய்கள் விரும்பப்படுகின்றன. கொதி குழாய்கள் சோதனைக் குழாய்களைவிடப் பெரியவையாகும்.

மூலக்கூற்று உயிரியலில்

மூலக்கூற்று உயிரியலில் பல்வேறு வகையான ஆய்வுக் குழாய்கள் (tubes) செய்முறைக்காக பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக மூலக்கூற்று உயிரியலில் மிக குறைவான (மைக்ரோ லிட்டர் முதல் மில்லி லிட்டர் ) கொள்ளவுகளில் ஆய்வுகள் நிகழ்த்தபடுவதால், இம்முறையில் பயன்படும் குழாய்கள் சிறியனவாக இருக்கின்றன. இவை 100 மைக்ரோ லிட்டர் (0.1 ml) முதல் 2 மில்லில் லிட்டர் (2ml) வரை கொள்ளவு கொண்ட குழாயாகும். மைக்ரோ மற்றும் மில்லி லிட்டர் அளவுகளை எடுப்பதற்கு சிறு உறிஞ்சும் குழல்கள் (tips) உள்ளன.

வடிகட்டி உறிஞ்சும் குழல்களை பல்வேறு அளவுகளில் விவரிக்கும் படம்

.

செய்முறைகளின் போது ஒருசிறிதே அயல் பொருள்கள் அல்லது மாசுக்கள் இருந்தாலும், அவற்றின் சிறு மூலக்கூறுகள் நாம் மேற்கொள்ளும் பணிகளை தடுக்கவல்லன. எடுத்துகாட்டாக ஆர்.என்.ஏ ஆய்வுகளின் போது, நாம் கைகளில் அல்லது பணி புரியும் இடங்களில் எளிதாக காணப்படும் ஆர்.என்னேசு (RNase) என்னும் நொதியால் செய்முறைகள் தடுக்கப்படக்கூடும். இவ்வகையான நொதிகள் ஆர்.என்.ஏ க்களை அழிக்கும் தன்மை கொண்டவை. ஆதலால் ஆய்வு முறைக்கு உட்படுத்தப்படும் சிறு குழாய்கள் மற்றும் உறிஞ்சும் குழல்களை மாசகற்றல் (sterilization) என்னும் முறையில் மிக உயர் அழுத்த நிலைகளில் தூய்மை படுத்தப்படும். மேலும் நீர்மங்களை எடுப்பதற்கு பைப்பெட் என்னும் நுண்குழாய் (pippet) உறிஞ்சிகளின் மூலம் உறிஞ்சும்போது, அவற்றின் மேற்பகுதியில் பட்டு மாசு அடைவதற்கும், உறிஞ்சும்போது உள்-செலுத்தப்படும் காற்றின் மூலமும் அயல் பொருள்கள் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இவற்றைக் களைவதற்கு பின்னாளில் வடிகட்டி உறிஞ்சும் குழல்கள் (filter tips) அறிமுகப்படுத்தப்பட்டன.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.