சேனாவரையர்

தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர் சேனாவரையர். சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும்.[1]. எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும்.

13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து.[2][3][4] கல்வெட்டு ஆற்றூர் சோமநாத சாமிக்குச் சேனாவரையர் நிலம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இதனால் இவரது ஊர் மிழலை ஆற்றூர் எனத் தெரிகிறது.

நன்னூலை [5] இவர் மேற்கோள் காட்டுவதால் இவரது காலம் அதற்குப் பிந்தியது. சேனாவரையர் நிலம் அளித்த சேய்தியைக் கூறும் கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது.[6] எனவே சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.

இவர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுளவாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத் தெரித்துணர்த்துவதினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையுடைமையானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இரு வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழி வழக்கினையுங்கொண்டு பொருளுரைத்தலினானும் தலைசிறந்து விழங்குவது சேனாவரையருரையே

பிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல நயங்கள் உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது.

உசாத்துணைகள்

  • கணேசையர், சி., தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும், திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1938.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. ஒப்புநோக்குக. பனை + அட்டு = பனாட்டு (தொல்காப்பியம் 1-284)
  2. ஆற்றூர் சேனாவரையன்
  3. மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு பராந்தகநல்லூர்ப் புதுக்குடியினரான சேனாவரையர்
  4. பராந்தகநல்லூர்ச் சேனாவரையர்
  5. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய நூல்
  6. 1268-1311
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.