செறிவு

இரசாயனவியலில் ஒரு கரைசலில் ஒரு அலகுக் கனவளவில் உள்ள குறித்த பொருளின் அளவு அதன் செறிவு எனப்படும்.[1] திணிவு/கனவளவு வீதம், மூலர் திறன், கனவளவு/கனவளவு வீதம் என்பன செறிவின் பிரதான வகைகளாகும். செறிவு அதிகளவில் இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சொற்பதமாகும். இரசாயனவியல் கணிப்புக்களில் கூடுதலாக மூலர்திறனே பயன்படுத்தப்படுகின்றது. செறிவு கூடிய கரைசல் செறிவான கரைசல் எனவும், செறிவு குறைவான கரைசல் ஐதான கரைசல் எனவும் அழைக்கப்படும். ஒரு கரைசலைச் செறிவாக்குவதற்குக் கரைசலினுள் மேலதிகமாக கரையத்தைச் சேர்க்க வேண்டும். ஒரு கரைசலை ஐதாக்குவதற்கு கரைப்பானை கரைசலுக்குள் சேர்க்க வேண்டும். உதாரணமாக ஒரு உப்புக் கரைசலைச் செறிவாக்குவதற்கு கரைசலினுள் மேலும் உப்பு சேர்க்க வேண்டும். ஒரு உப்புக்கரைசலை ஐதாக்குவதற்கு அக்கரைசலினுள் நீரைச் சேர்க்க வேண்டும்.

இடமிருந்து வலமாகக் கரைசல்களின் செறிவு அதிகரிக்கின்றது.

ஒரு கரைசலினுள் ஒரு கரையத்தின் குறிப்பிட்ட அளவு மாத்திரமே கரைய முடியும். அதற்கு மேல் சேர்க்கப்படும் எந்தவொரு கரையமும் கரைசலில் கரையாது. உதாரணமாக நியம நிபந்தனையில் சோடியம் குளோரைடு நீரின் 1 லீட்டரில் 359 g மட்டுமே கரையும். 400 g உப்பை ஒரு லீட்டர் நீருடன் சேர்த்தால் அதில் 41 g கரையாமல் எஞ்சும். இதன் போது உருவாக்கப்படும் கரைசல் நிரம்பிய கரைசல் எனப்படும். ஏனெனில் இங்கே சோடியம் குளோரைடு உச்ச செறிவில் உள்ளது.

செறிவைக் குறிப்பிடும் முறைகள்

திணிவு/கனவளவு வீதம்

கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் திணிவை () கரைசலின் கனவளவால் () பிரிப்பதன் மூலம் திணிவு கனவளவு வீதம் அல்லது கரைசலின் திணிவுச் செறிவைக் () கண்டறியலாம்:

இதன் நியம சர்வதேச அலகு kg/m3. எனினும் அன்றாடப் பயன்பாட்டில் g/L என்னும் அலகே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

மூலர் திறன்

இதுவே செறிவைக் குறிப்பிடும் முறைகளில் கணிப்புகளின் போது அதிகம் பயன்படுத்தப்படும் முறையாகும். வேதியியற் கணிப்புகளின் போது ஏனைய செறிவைக் குறிப்பிடும் முறைகள் இம்முறைக்கு மாற்றப்படும். இம்முறை ஒரு லீட்டர் கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. கரைசலில் உள்ள கரையத்தின் மூல்கள் எண்ணிக்கையை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் மூலர் திறனைக் கண்டறியலாம்.

இதன் சர்வதேச நியம அலகு mol/m3 ஆகும். எனினும் mol/L (= mol/dm3) என்னும் அலகுகளே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது.

கனவளவு/கனவளவு வீதம்

கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் கனவளவை கரைசலின் கனவளவால் பிரிப்பதன் மூலம் கனவளவு/கனவளவு வீதம் அல்லது கனவளவுச் செறிவு கணிக்கப்படுகின்றது. இப்பெறுமானம் ஐதாக்கப்பட்ட திரவத்-திரவக் கரைசல்களின் (உ-ம்:அல்கஹோல்-நீர் கரைசல், அமில-நீர் கரைசல்) ஆகியவற்றைக் கொண்டுள்ள கொள்கலன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இக்கணியத்துக்கு அலகு இல்லை. இதனை பின்னமாகவோ, தசமமாகவோ, சதவீதத்திலோ குறிப்பிட முடியும். உதாரணமாக 100 ml அல்கஹோல்-நீர் கரைசலொன்று 0.23 கனவளவு/கனவளவு வீதத்தைக் கொண்டிருந்தால் அக்கரைசலில் 23 ml அல்கஹோல் அடங்கியுள்ளது என குறிக்கப்படும். இதனை 23% என்று சதவீதத்தாலும் குறிக்க முடியும்.

தொடர்புடைய வேறு கணியங்கள்

ஒரு கரைசலை விளக்குவதில் பின்வரும் கணியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பின்வரும் கணியங்கள் கரைசலின் செறிவைக் குறிப்பதில்லை.[1]

மூலல் திறன்

ஒரு அலகு திணிவுடைய கரைப்பானால் கரைக்கப்பட்டுள்ள கரையத்தின் அளவு என மூலல் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைக் கணிப்பதற்கு கரைசலில் உள்ள கரையத்தின் மூல்களின் அளவை கரைப்பானின் திணிவால் பிரிக்க வேண்டும்.

மூலல் செறிவு

இக்கணியம் mol/kg என்ற அலகால் குறிப்பிடப்படும்.

மூல் பின்னம்

கரைசலில் கரைந்துள்ள கரையத்தின் மூல்களை கரைசலிலுள்ள அனைத்துப் பொருட்களின் (கரையம்+கரைப்பான்) மொத்த மூல்களால் பிரிப்பதால் மூல் பின்னம் கணிக்கப்படும்.

இதன் சர்வதேச நியம அலகு mol/mol ஆகும். எனினும் இது ஒரு பரிமாணமற்ற கணியமாகும்.

திணிவுப் பின்னம்

கரைசலில் கரைக்கப்பட்ட கரையத்தின் திணிவை கரைசலின் மொத்தத் திணிவால் பிரிப்பதன் மூலம் திணிவுப் பின்னம் கணிக்கப்படும்.

இதன் அலகு kg/kg ஆகும். அலகில்லாமல் சதவீதம், தசமதானம் ஆகியவற்றாலும் குறிக்க முடியும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.