செருமானிக் மக்கள்

செருமானிக் மக்கள் (Germanic peoples) என்பவர்கள், வடக்கு ஐரோப்பிய மூலத்தைக் கொண்ட இந்திய-ஐரோப்பிய இன-மொழிக் குழுவைச் சேர்ந்தோர் ஆவர்.[1] இவர்களிற் பெரும்பாலோர், முன்-உரோம இரும்புக் காலத்தில் முந்தைச் செருமானியத்தில் இருந்து பிரிந்த செருமானிய மொழிகளோடு தொடர்புடையவர்கள்.[2]

செருமானிக் ஆட்சிக் குழுக் கூட்டம், பொகா 193 இன் மார்க்கசு ஓரேலியசின் தூணில் உள்ள சிற்பத்தைத் தழுவி வரையப்பட்டது.

"செருமானிக்" (Germanic) என்னும் சொல், செந்நெறிக் காலத்தில், கீழ், மேல், பெரும் செருமானியப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிக் குழுக்களைக் குறிப்பதற்கு உரோம எழுத்தர்கள் பயன்படுத்தியபோது உருவானது. உரோமர்களின் "செருமானிக்" என்னும் சொற் பயன்பாடு மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டியது இல்லை. ஆனால் இது, தற்கால லக்சம்பர்க், பெல்சியம், வடக்கு பிரான்சு, அல்சாசு, போலந்து, ஆசுத்திரியா, நெதர்லாந்து, செருமனி ஆகிய நாடுகளில் வாழ்ந்த, நாகரிகத்தில் குறைந்தவர்களாகவும், செல்ட்டியக் கௌல்களைக் காட்டிலும் உடல் ரீதியாக உரம் ஏறியவர்களாகவும் காணப்பட்ட பழங்குடிக் குழுக்களைக் குறித்தது.

உரோம-செருமானிய போர்களில், குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், ஐரோப்பிய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செருமானியப் பழங்குடிகள் இருந்ததாக உரோமின் வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தெயுத்தோபர்க் காட்டுச் சண்டையில், செரூசியின் தலைவன் ஆர்மினியசின் கீழ் போரிட்ட செருமானிக் பழங்குடிப் போர்வீரர்கள் மூன்று உரோமானியப் படைப்பிரிவுகளையும் அவர்களது துணைப் படைகளையும் தோற்கடித்தனர். இது உரோமப் பேரரசின் படைகள் மக்னா செருமானியாவில் இருந்து பின்வாங்கக் காரணம் ஆயிற்று.[1]

இனப்பெயர்

பொகாமு 222 அளவில், "ஜெர்மானி" (Germani) என்னும் இலத்தீன் சொல்லின் பயன்பாடு பாசுத்தி கப்பித்தோலினி கல்வெட்டில் காணப்பட்டது. இது கவுல் அல்லது தொடர்புடைய மக்களைக் குறித்திருக்கக்கூடும். எனினும், இது முன்னைய தேதியொன்றை குறிப்பிடும் பொகாமு 18 இல் நிறுவப்பட்ட கல்வெட்டு ஆதலால், இதில் குறித்த தேதி சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பொசிடோனியோசு என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பொகாமு 80 ஐச் சேர்ந்த ஆவணம் ஒன்றில் இச்சொல் மீண்டும் காணப்பட்டதாகத் தெரிகிறது. இவ்விடயம் மிகவும் பிந்தி பொகா 190 இல் ஆதனையோசு என்பவரால் மேற்கோளாகவே காட்டப்பட்டுள்ளது. இதற்குச் சற்றுப் பின்னர் "ஜெர்மானி", "ஜெர்மானியா" தொடர்பான விரிவான விளக்கங்கள் யூலியசு சீசரிடம் இருந்தே வருகிறது. யோலியசு சீசரின் நினைவுக் குறிப்புகள் அவரது நேரடி அனுபவங்களின் அடிப்படையிலானது.

சீசரின் நோக்கில் "ஜெர்மானியா" என்பது, சீசரினால் உரோமின் கட்டுப்பாட்டுக்கு வெளியே விடப்பட்டிருந்த கவுலுக்கு எதிர்ப்புறத்தில், ரைன் ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்த ஒரு புவியியல் நிலப்பரப்பைக் குறித்தது. "செருமானிக் மொழிகள்" என்னும் கருத்துருவுக்கும், "செருமனி" என்னும் புவியியல் பண்பாக்கப் பெயருக்கும் மேற்படி சொல்லே சொற்பிறப்பு மூலம் ஆகும். சில செந்நெறிக் கால எழுத்தாளர்களைப் பொறுத்தவரை, "ஜெர்மானியா" சர்மாத்தியாப் பகுதியையும், உரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த ரைன் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதியையும் குறித்தது. மேலும் தெற்கில், ரைனுக்குக் கிழக்கிலும், ஆல்ப்சுக்கு வடக்கிலும் செல்ட்டிய மக்கள் இன்னும் வசித்து வந்தனர். ரைனுக்குக் கிழக்கே வேறுபட்ட பண்பாடுகள் இருப்பதாக சீசர், தசித்தசு போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்தப் பாண்பாட்டுக் குறிப்புக்களின் கருப்பொருள் அப்பகுதிகள் காடாகவும், ஆபாத்தானதாகவும் இருந்தன என்பதுடன், கவுல் பகுதியைவிட நாகரிகம் குன்றியதாக இருந்தது என்பதும் அதனால், கூடுதலான படைக் கண்காணிப்புத் தேவைப்பட்டது என்பதுமாகும்.[3]

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.