செம்புலப்பெயல்நீரார்

செம்புலப்பெயல்நீரார் அல்லது செம்புலப் பெயனீரார் ஒரு சங்க காலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 40 எண்ணுள்ள பாடல்.

செம்புலம்

புலவர் பெயர்

செம்புலப் பெயனீரார் என்பவர் சங்கப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகையில் பாடல் தொடர்களால் பெயர் பெற்ற பதினெட்டுப் புலவர்கள் உளர். அப்புலவர்களுள் தாம் பாடிய உவமையால் பெயர் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை பதின்மூன்று ஆகும். செம்புலப் பெயனீரார் அவ்வகையில் பெயர் பெற்ற புலவராவர். செம்புலப் பெயனீராரின் பாடலாகக் குறுந்தொகையின் நாற்பதாம் பாடல் ஒன்று மட்டுமே தற்போது அறியப்பட்டுள்ளது1. வேறு பாடல்கள் ஏதும் அவரால் பாடப்பட்டனவா என்பதைத் தற்போது அறிய இயலவில்லை. இவரது பாடலில் "செம்புலப் பெயல்நீர்" என்னும் தொடர் வருகிறது. எட்டுத்தொகை தொகுப்பு குறுந்தொகை நூலைத் தொகுத்தவர், இவரது இயற்பெயர் தெரியாத நிலையில், இவருக்குச் "செம்புலப்பெயல்நீரார்" என்னும் பெயரைச் சூட்டியுள்ளார்.

பாடல்

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செய்தி

பாடலின் கூற்று: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது.2

யாய் - என் தாய். ஞாய் - உன் தாய். எந்தை - என் தந்தை. நுந்தை - உன் தந்தை. செம்புலம் - செம்மண் நிலம் என்பார் உ.வே.சாமிநாதர்3. பாலை நிலம் என்பார் மு. சண்முகம்4. குறிஞ்சி நிலம் என்பார் ஆ. மணி5 பெயனீர் - மழைநீர்.

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர்களல்லர். என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும் உறவினரல்லர். நானும் நீயும் கூட ஒருவரையொருவர் முன்னர் அறிந்ததில்லை என்றாலும் கூட, நம் நெஞ்சம் செம்புலத்திற் பெய்த நீர் போலக் கலந்து விட்டது. எனவே நான் உன்னைப் பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன் தலைவியைத் தேற்றுகின்றான்.

செம்புலப் பெயல்நீர்

செம்புலம் என்பது செம்மை செய்து சமனாக்கிப் பண்படுத்தப்பட்ட வயல். வயலில் பெய்த மழைநீர் (வரப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு) வயலுக்குள் ஊறுவது போல் (பயிருக்குப் பயன்படுவது போல்) மண்ணும் ஈரமுமாகக் கலந்துவிட்டனவே! என்கிறான் தலைவன் தலைவியிடம்.
நிலத்தின் நிறமும், சுவையும், மணமும் மழைநீருக்குள் கலந்துவிடுவது போல் உள்ளங்கள் கலந்துவிட்டனவாம்.
தலைவன் நெஞ்சம், தலைவி நெஞ்சம் ஆகிய இவற்றில் ஒன்று மழை என்றால் மற்றொன்று வயல்.

கலப்புமணம்

சங்ககாலத்தில் உள்ளங்கள் ஒன்றுபட்ட உறவுத் திருமணம் குலம் பார்க்காத கலப்புத் திருமணமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டும சான்றுகளில் இப்பாடல் முதன்மையானது

அடிக்குறிப்புக்கள்

1. உ.வே. சாமிநாதர் (உரை.ஆ.). 1983. குறுந்தொகை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம். ப. ௧௩௮. 2. மேலது. ப. 101. 3. மேலது. ப. 101. 4. மு. சண்முகம்(பதி.ஆ.) 1994. குறுந்தொகை. தமிழ்ப்பல்கலைக் கழகம். ப. 43. 5. ஆ. மணி (க.ஆ.). 2011சனவரி - மார்ச்சு. புதிய பனுவல் - பன்னாட்டு ஆய்விதழ். ப. 39 – 47. ISSN : 0975 – 573X.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.