சுவடி (நிறுவனம்)
சுவடி எனக் குறித்தழைக்கப்படும் இப் பொறுப்பு வரையறுக்கப்பட்ட இலாப நோக்கற்ற கம்பனியானது இலங்கைத் தீவின் வடபுலத்தேயுள்ள யாழ்நகரில் தலைமைப் பணிமனையைக் கொண்டுள்ளது. 19 ஆம் திகதி, சூலை, 2010 அன்று உத்தியோகபூர்வமாகப் இலங்கையில் பதியப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந் நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நவீன கல்வி முறைகள் மூலமாக ஓர் அறிவார்ந்த சமூகத்தினைக் கட்டியெழுப்புவதைக் குறிப்பிலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. எண்ணிம நூலகங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குதல், அவற்றின் நிலைபெறுகையை உறுதிப்படுத்துதல், பல்துறைக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல், திறமூல மென்பொருள் பயன்பாட்டுக்கான பரப்புரை என்பன இந் நிறுவனத்தின் தலையான பணிகளாகும்.
வகை | Non-profit organization |
---|---|
நிறுவப்பட்டது | 19 ஜூலை 2010 |
தலைமையகம் | யாழ்ப்பாணம் |
இணையத்தளம் | http://www.suvadi.org/ |

நிறுவனத்தின் தோற்றம்
2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ’சுவடி எண்ணிம நூலகச் செயற்திட்டமே’ இந் நிறுவனத்தின் தேவைப்பாட்டினை உணரச் செய்தது. இச் செயற்திட்டம் யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், உயர்தர மாணவர்களிற்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனப் பலரின் கடின உழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட போதும் பொதுமக்களிடையே எண்ணிம நூலகங்கள் தொடர்பான போதிய தெளிவு காணப்படாமையால் பெரிதும் அணுகப்படவில்லை. மிகச் சொற்ப எண்ணிக்கையானவர்களே இந் நூலகத்தினைப் பயன்படுத்த எத்தணித்தனர். ‘எண்ணிம நூலகங்கள்’ தொடர்பான விழிப்புணர்வினை மக்களிடையே கட்டி எழுப்ப நீண்டகாலம் தேவை என்பதை உணர்ந்து கொண்ட செயற்திட்ட வழிகாட்டற் குழுவினர் அப் பணியைச் சிறப்புற மேற்கொள்ள எடுத்த ஓர் உறுதியான முன்னகர்வே நிறுவன உருவாக்கத்திற்கு அடிப்படையாகியது. மிகுந்த சிரமத்தின் மத்தியில் செயற்திட்ட வழிகாட்டற் குழுவினர் இலங்கைத் தீவின் சகல பகுதிகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற கம்பனியாக சுவடி நிறுவனத்தினை உருவாக்க எத்தணித்தனர். இதன் விளைவாக சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலான நீண்ட திட்டமிடலின் பலனாக சுவடி நிறுவனம் உதயமானது.
பிரதான பணிகள்
- எண்ணிம நூலகங்கள் உருவாக்குவதற்கான ஆலோசனை
- எண்ணிம நூலகங்களின் நிலைபெறுகையை உறுதிப்படுத்துதல்
- பல்துறைக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் வழங்கல்
- திறமூல மென்பொருள் பயன்பாட்டுக்கான பரப்புரை
எதிர்நோக்கும் சவால்கள்
இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள சுவடி நிறுவனம் தன் நிலைபெறுகையை உறுதியாக்கியுள்ளது ஆயினும் குறைந்தளவான வலிந்துதவு பணியாளர்கள், நிறுவனத்தில் குறிப்பிலக்கின் அவசியத்தன்மை தொடர்பில் சமுக அளவில் போதிய தெளிவின்மை, செயற்பாடுகளை வட மாகாணத்தின் சகல பகுதிகளிற்கும் தீவின் ஏனைய மாகாணங்களிற்கும் விஸ்தரிக்க போதிய நிதி மற்றும் ஆளணிப் பற்றாக்குறை போன்றவற்றினை பிரதான சவால்களாக எதிர்நோக்கியுள்ளது.
சுவடி வலை இணைப்புக்கள்
வெளி இணைப்புகள்
- சுவடியின் முகப்புத்தகப் பக்கம்
- ரூவீட்டரில் சுவடி
- சுவடி நிறுவனத்தின் உத்தியோகபூர்வப் பக்கம் - Linked In
==குறிப்புகளும் மேற்கோள்களும்== * [http://suvadi.org சுவடி வலையின் முதன்மைப் பக்கம்] * [http://edu.suvadi.org Education LK] <references />