சுயமரியாதைத் திருமணம்

சாத்திரங்கள், சாதகங்கள் பார்க்காமல், சடங்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆடம்பரம் இல்லாமல், தமிழ் மொழியில் நடத்தப்படும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

வரலாறு

இந்தியாவில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மணமக்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலேயே மணமக்களின் பெற்றோர்களால் மட்டும் முடிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வந்தது. இத்திருமணம் புரோகிதர்களைக் கொண்டு பல சடங்குகளைச் செய்து நடத்தி வைக்கப்பட்டது. இப்படி செய்யப்படும் திருமணத்தில் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவராகவும், கணவனுக்கு உடலில், மனத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கடைசி வரை கணவனைக் காப்பாற்றும் விதமாக மனைவி கணவனுடனேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை முதன் முதலில் தகர்த்து புதிய சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டின் பகுத்தறிவுத் தந்தையாகப் போற்றப்பட்ட பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சட்டம்

1955 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்த அறிஞர் அண்ணா இதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இது சட்டமன்ற விவாதத்திற்குப் பின்பு அப்போதிருந்த சட்டமன்ற அவை, மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 17-01-1968ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று 20-01-1968ல் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமாக்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.