சுண்டை

சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

Solanum torvum
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: மெய்யிருவித்திலையி
துணைவகுப்பு: Asteridae
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: கத்தரிப் பேரினம்
இனம்: S. torvum
இருசொற் பெயரீடு
Solanum torvum

விளக்கம்

சுண்டையானது ஓரளவு வளரும் பெருஞ்செடி வகையான முட்கள் கொண்ட தாவரம் ஆகும். இதன் இலைகள் அகன்று விரிந்தும் சிறிய பிளவுகள் தென்படுவதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டதாகவும், கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்களைக் கொண்டதாகவும் இருக்கும்.[1]

சுண்டை வகைகள்

பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு.

  1. காட்டுச் சுண்டை
  2. நாட்டுச் சுண்டை

காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன.

மருத்துவ குணங்கள்

சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.

சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்.

அகத்தியர் பாடல்

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்

என்று சுண்டைக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாட பாடலில் கூறப்பட்டுள்ளது.


சுண்டைக்காய் வற்றல் (Dried Turkey berries) பற்றி மற்றொரு வெண்பா

பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும்
உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.

மேற்கோள்கள்

  1. டாக்டர் வி. விக்ரம் குமார் (2018 சூன் 30). "செரிமானச் சிகரம் சுண்டைக்காய்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 1 சூலை 2018.

(Source: “Mooligai Marmam” by Sirumanavur Munusami Mudaliar, Published: 1899)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.