சிவவாக்கியர்

சிவவாக்கியர் எனும் சித்தர், பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.

சிவவாக்கியார்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?

ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம்
உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா
உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா
உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு." எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

உசாத் துணை

இரா.இளங்குமரன், சித்தர் பாடல்கள்: சிவவாக்கியர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984, பக்கங்கள் 1 - 126.


சிவவாக்கியர் வாழ்க்கைக் குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.