சிவப்பிரகாசம் (நூல்)

சிவப்பிரகாசம் என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். 14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் எட்டு நூல்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரே இதன் ஆசிரியராவார். இந் நூல் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை நூறு விருத்தப் பாடல்களால் விளக்குகின்றது. இந்த நூலுக்கு முதல்நூல் சிவஞான போதம். வழிநூல் சிவஞான சித்தி. இது சார்புநூல். இது தோன்றிய காலம் 14ஆம் நூற்றாண்டு.

வடமொழி உபநிடதக் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக்குகிறது.

இந்த நூலுக்குப் பல உரைநூல்கள் உள்ளன. அவை:தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை ஞானப்பிரகாசர் உரை (அச்சாகவில்லை),தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை சிவப்பிரகாசர் பேருரை, சிதம்பரநாத முனிவர் உரை, நல்லசிவதேவர் சிந்தனையுரை, அருள்நந்திதேவர் உரை (அச்சாகவில்லை), திருவுருமாமலை அடிகள் உரை, திருவிளக்கம் புத்துரை, மற்றும் பழைய உரைகள் சில.

இந்நூலிலுள்ள பாடல் எடுத்துக்காட்டு

தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று

தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த

நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம்

நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம்

தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்;

தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல்

இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று

இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே. (அவையடக்கப் பாடல்)
இதில் சொல்லப்பட்ட கருத்து
நூல் பழமையானது என்பதால் நன்று என்றும், இன்று தோன்றியது என்பதால் தீது என்றும் கொள்ளலாகாது. நூலில் சொல்லப்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நூலை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நூலை யாரேனும் ஒருவர் புகழ்ந்துவிட்டால் எல்லாரும் அதனைப் புகழத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்கள் தமக்கென்று கொள்கை இல்லாதவர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
  • உமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு. 2005

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.