சில்பி
சில்பி (1919 - 10 ஜனவரி 1983)[1] என அறியப்பட்ட பி. எம். சிரீனிவாசன் தமிழகத்தின் பிரபல கோட்டோவியராக வாழ்ந்து மறைந்தவர். கும்பகோணம் அருகிலுள்ள புலியூரில் பிறந்தவர். நாமக்கல் கவிஞரால் இவரது திறமை அடையாளம் காணப்பட்டு ஓவியக்கல்லூரியில் சேர ஊக்குவிக்கப்பட்டார்.[1]
திருக்கோயில்களுக்கு நேரடியாகச் சென்று தங்கியிருந்து அங்குள்ள சிற்பங்களின் அழகையும் தெய்வத் திருவுருவங்களையும் ஓவியமாக வரைந்தவர். இவரது படைப்புகள் ஆனந்த விகடன் போன்ற தமிழிதழ்களில் வெளிவந்தன.[2]
வாழ்க்கை
இவர் சென்னைக் கலைக்கல்லூரியிலும் சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியிலும் ஓவியம் பயின்றவர், ஆனந்த விகடன் இதழில் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளை ஓவியமாக வரைந்தவர். மேலும் ஆனந்தவிகடனில் பணியாற்றிய ஓவியர் மாலியைத் தனது வழிகாட்டியாகக் கருதினார். இவர் கோயில் சிற்பங்களை வரைவதைக் கண்டு மாலி இவருக்கு சில்பி எனும் பெயரைச் சூட்டினார். மிகுந்த பக்தியுடைய சில்பி ஆனந்த விகடனில் பணியாற்றிய 22 வருடங்களில் தனது திறமையை பலமடங்கு வளர்த்துக் கொண்டார்.
1948 முதல் 1961 வரை ஆனந்த விகடன் இதழ்களில் தென்னிந்தியக் கோயில்களில் ஓவியங்களைத் தென்னாட்டுச் செல்வங்கள் எனும் தலைப்பில் வரைந்தார்.[3]
1945 முதல் 1967 வரை விகடனில் பணியாற்றிவிட்டு பின்னர் அதிலிருந்து விலகிய பின்னர் கலைமகள், அமுதசுரபி மற்றும் தினமணிக்கதிர் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்தார். தென்னிந்தியாவின் முக்கியக் கோயில்கள் அனைத்திற்கும் சென்று ஓவியம் வரைந்துள்ளார் சில்பி. பக்தர்கள் தரிசனம் முடித்துக் கிளம்பிய பின்னர் இரவிலே ஓவியங்கள் வரைந்தார். இவருடைய ஓவியங்களில் உண்மைத்தன்மை அதிக அளவு இருப்பதால் பக்தர்கள் இவரது ஓவியத்தை தனது வீட்டின் கடவுள் அறையில் வைத்து பூசித்து வணங்கினர்.
’தென்னாட்டு செல்வங்கள்’ நூல்
இவரது ஓவியங்கள் தொகுக்கப்பட்டு ’தென்னாட்டு செல்வங்கள்’ என்ற தலைப்பில் நூலாக விகடனால் வெளியிடப்பட்டது.[4]. இந்நூல் குறித்து சட்டரீதியான பதிப்புரிமைச் சிக்கல்கள் எழுந்தன.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- http://www.noolulagam.com/tamil-book/9308/thenattu-selvangal-part-1-2-book-type-aanmeegam-by-silbi/
- சில்பியின் ஓவியங்கள்
- சில்பியின் ஓவியங்கள்
- வலைப்பூ
- http://poetryinstone.in/lang/en/2008/10/21/silpi-an-artist-par-excellance.html
- http://www.vallamai.com/?p=33075
- http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article746091.ece?service=print
- https://www.nhm.in/shop/100-00-0000-806-3.html