சீரடி சாயி பாபா

சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838.[1] – அக்டோபர் 15, 1918), (மராத்தி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.[2]

சீரடி சாயி பாபா
இந்தியா
20ஆம் நூற்றாண்டு
சாயி பாபா, சீரடி
முழுப் பெயர்சீரடி சாய் பாபா
சிந்தனை
மரபு(கள்)
இந்து சமயம் (அத்வைதம்) மற்றும் இசுலாம் (சூபிசம்)

ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.[1]

பிறப்பு

மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா - தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.

அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய அந்த முதியவர், “எனக்கு கால்கள் வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார். இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி அடைந்தார். பணம் வாங்கிக் கொண்டு யாராவது அவருக்கு கால் பிடித்து விட வருவார்களா என்று தேடிப்பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. இந்த முறை ஒரு பெண் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவள், “இந்த முதியவருக்கு நான் பணிவிடை செய்யட்டுமா” என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி செய்யுங்கள்” என்று கூறி பணம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.

வெளியில் இருந்த முதியவரும், பெண்ணும் உண்மையில் பரமசிவனும், பார்வதியும் ஆவார்கள். அவர்கள் இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க முடிவு செய்தனர். அவர்கள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. வெளியில் பரமசிவனும், பார்வதியும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர், மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா இறைவன், இறைவி முன்பு விழுந்து வணங்கினார்.

அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும், மூன்றாவது குழந்தையாக நானே உன் வயிற்றில் பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர். தேவகிரியம்மாவுக்கு நடப்பது கனவு போல இருந்தது. கங்கா பாவத்யா வீடு திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால் கங்கா பாவத்யா அதை நம்பவில்லை. சில தினங்களில் தேவகிரியம்மா கர்ப்பமடைந்தார், முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா பெற்றெடுத்தார். மூன்றாவது முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

தேவகிரியம்மாவுக்கு காட்சி கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தேவகிரியம்மா அவரைப்பின் தொடர்ந்தார். தம்பதியர் இருவரும் காடு - மேடுகளில் அலைந்து திரிந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவகிரியம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.

முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார்.[3]

இந்து முஸ்லீம் சிநேகம் வளர்த்தது

பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இவர், இந்து முஸ்லீம்களிடையே சிநேகத்தை வளர்த்தவர். மசூதியில் வேற்றுமை பாராட்டாமல் நுழைந்து இந்துக்களை இவரை வழிபட வைத்தது போலவே, மசூதியை மலர்களால் அலங்கரிக்க விரும்பிய முஸ்லீம் பக்தரை அந்த மலர்களை அருகிலிருந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்ய பணித்தது என்று பல நிகழ்வுகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் நண்பர்களாக விளங்க வேண்டும் என்ற தமது உன்னத எண்ணத்தை செயல்படுத்தியவர்.

மேற்கோள்கள்

  1. கருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (ஸ்ரீ ஷீரடி சாய் காவியம்); சங்கர் பதிப்பகம்; சென்னை; பக்கம் 9,10
  2. http://m.tamil.webdunia.com/article/religious-thoughts/of-miracles-shirdi-sai-baba-s-glory-116071400037_1.html
  3. https://www.maalaimalar.com/Devotional/Worship/2016/04/28150427/1008933/shirdi-sai-baba-worship.vpf

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.