நிறுவன காங்கிரசு

நிறுவன காங்கிரசு அல்லது ஸ்தாபன காங்கிரசு (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.

1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.

1971 பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. 1977 பொதுத் தேர்தலில் நிறுவன காங்கிரசு, பாரதீய ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. தேர்தலில் வென்று மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரசு கட்சி சாராத பிரதமரானார். 1979 வரை ஜனதா கட்சி ஆட்சியில் நீடித்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.