சினான்

சினான் என்று பரவலாக அறியப்படும் கோக்கா மிமார் சினான் ஆகா, ஓட்டோமான் காலத்துக் கட்டிடக் கலைஞரும், குடிசார் பொறியாளரும் ஆவார். இவர் முதலாம் சுலைமான், இரண்டாம் சலீம், மூன்றாம் முராட் ஆகிய சுல்தான்களின் கீழ் ஓட்டாமான் பேரரசின் தலைமைக் கட்டிடக் கலைஞராகவும் குடிசார் பொறியாளராகவும் பணிபுரிந்தார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் ஓட்டோமான் பேரரசில் கட்டப்பட்ட ஒவ்வொரு முக்கியமான கட்டிடத்தினதும் கட்டுமானத்துக்கு அல்லது அதனை மேற்பார்வை செய்வதற்கு இவர் பொறுப்பாக இருந்தார். நடுத்தர அளவுள்ள கட்டிடங்களைத் தவிர்த்து முந்நூறுக்கு மேற்பட்ட முக்கிய கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு இவர் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

முதலாம் சுலைமானின் சமாதிக் கட்டிடத்தில் இடப்புறம் காணப்படுபவர் சினானாக இருக்கலாம். 1566

இவரது கட்டிடங்களுள் மிகப் புகழ் பெற்ற கட்டிடமாக விளங்குவது இசுத்தான்புல்லில் உள்ள சுலைமான் மசூதியே எனினும், இவரது மிகச் சிறந்த கட்டிடமாகக் கருதப்படுவது எடிர்னே என்னும் இடத்தில் அமைந்துள்ள செலிமியே மசூதி ஆகும். இவருக்குக் கீழ் மிக விரிவான ஒரு அரச திணைக்களம் இயங்கியது. இவரிடம் பணிபுரிந்த இவரது உதவியாளர்களில் பலர் பின்னர் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுள், சுல்தான் அகமது மசூதியின் கட்டிடக்கலைஞரான செடெஃபார் மெகுமெத் ஆகா போன்றவர்களும் அடங்குவர். ஓட்டோமான் கட்டிடக்கலையின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த கட்டிடக்கலைஞராகக் கருதப்படும் சினான், மேற்குலகில் இவருக்குச் சமகாலத்தவரான மைக்கலாஞ்சலோவுடன் ஒப்பிட்டுக் கூறப்படுபவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.