சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும். [1] இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.

முறை

வீட்டின் பூசை அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி விநாயகர் படத்தினை வைக்கின்றார்கள். அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். இவற்றோடு காய்கறிகளும், பருப்பும், தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். இந்தச் சித்திரைப் பௌர்ணமியை சித்திர குப்தனின் திருமண நாளாக குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் சித்திர குப்தரிடம் "எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்" என வேண்டுகின்றனர். [2] இந்த நாளில் மாக்கோலம் போடுதல், ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி சாமியறையில் பூசை செய்தல், காலையிலிருந்து விரதம் இருத்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும், அங்குள்ள ஏழைகளுக்கும், சாமியார்களுக்கும் உணவிடுதலைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.

கல்வெட்டுகளில்

இந்த சித்ரா பௌர்ணமி விழா பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது. [3]

கோயில்களில்

இந்நாளில் சிவாலயங்களில் விழா கொண்டாப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்த சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்திரன் விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற பிராமர்களைக் கொன்றமையால், இங்குள்ள சிவனை சித்ரா பௌர்ணமியில் வழிபட்டு அப்பாவத்தினை நீக்குவதாக மதுரை தலபுராணம் கூறுகிறது. [4] காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோம்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.

ஆதாரங்கள்

  1. "Festival".
  2. "சித்ரா பௌர்ணமி வழிபாடு முறை - Chaitra Purnima worship- Dinakaran".
  3. "சித்ரா பௌர்ணமி காலங்காலமாகக் கொண்டாடப்படுவது ஏன்?".
  4. http://www.maalaimalar.com/Devotional/Worship/2016/04/16143431/1005299/Chitra-Poornima-celebrate-Reason-for-Madurai.vpf
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.