சிக்கன வாழ்முறை

சிக்கன வாழ்முறை என்பது சிக்கனமாக, விவேகமாக வாழ்வை அணுகுதல் ஆகும். பொருள் நுகர்வு, சமூக நிலை, தொழில், நேரம் என பல முனைகளில் சிக்கன வாழ்முறையை கடைப்பிடிக்கலாம். பெரும்பாலானோர் ஒரு சில விடயங்களில் ஆவது சிக்கனத்தைக் கடைப்பிடிப்பர்.


நுகர்வோர் பண்பாடு இன்று மேற்குநாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் நன்கு வேரூன்றியிருக்கிறது. இந்த நுகர்வோர் பண்பாடு தனிநபர், குடும்பங்கள், நாடுகள் என எல்லா மட்டங்களின் கடன்களையும் பெருக்கி இருக்கிறது. தொழில், வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புகளைப் பெருக்கியிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியாக சிக்கன வாழ்முறை பார்க்கப்படுகிறது.


அடிப்படையில் சிக்கன வாழ்முறை என்பது ஆடம்பரச் செலவுகளை வீணாக்குவதைத் தவிர்த்து, வரவுக்கு ஏற்ற திட்டமிட்ட செலவைக் குறிக்கிறது. தானே செய்தல், பகிர்வு, மீள்பயன்பாடு, படைப்பாற்றல் ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது.

சிக்கன வழிமுறைகள்

நுகர்வதில் சிக்கனம்

சிக்கன வாழ்முறைக்கும் அடிப்படை நுகர்வதிலில் சிக்கனம் கடைப்பிடிப்பதே. போத்தல்(பாட்டில்) தண்ணீர் அல்லது சோடா குடிப்பதை தவிர்த்து, நீர் பருகலாம். எல்லாப் பொருட்களையும் புதிதாக வாங்கவேண்டியதில்லை. குறிப்பாக தளபாடங்கள், தானுந்து போன்றவை. வீணாக எல்லா அறைகளிலும் மின்விளக்கு எரிய வேண்டியதில்லை. கோடை காலத்தில் குளிரூட்டியைப் பயன்படுத்துவதை விடுத்து, ஜன்னல்களை திறந்து விடலாம். ஆற்றல் குறைந்த விலையில் கிடைக்கும் இரவு நேரத்தில் ஆற்றல் கூட தேவைப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். கடைகள் கழிவு விலையில் பொருட்களை விற்கும் போது வாங்கலாம். கூப்பன்களை பயன்படுத்தலாம். கேபிள் தொலைபேசி Features போன்ற அவசியமற்ற சேவைகளை தவர்க்கலாம். இலகு பொதி உணவுகளை தவிர்க்கலாம். சில பொருட்களை தொகையாக வாங்கும் பொழுது சேமிப்பு கிடைக்கும். சில கடைகளில் ஒத்த அல்லது ஒரே பொருட்கள் இயல்பாக கூடிய விலையில் விற்கப்படும், எனவே அவற்றை தவிர்த்து மற்ற கடைகளில் வாங்கலாம். ஒரே தர பொருட்களுக்கு பெயர் பெற்ற நிறுவனப் பொருட்கள் விலை அதிகம்.

பகிர்வு

பொருள் பகிர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நூலகம் ஆகும். நூல்கள், திரைப்படங்கள், இசைத்தட்டுக்கள், கணினி விளையாட்டுக்கள் என பலவற்றை பொது நூலகங்களில் பெறலாம். இவற்றின் செலவை பலர் பகிர்ந்து, பலர் பயன்படக் கூடியதாக இருக்கிறது. நூல்கள் மட்டுமல்ல கருவிகளும் சேவைகளும் மற்ற பலவும் இவ்வாறு பகிரப்படக்கூடிவை. பொதுப் போக்குவரத்து பகிர்வுக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு. தற்போது அதிகரிக்கும் எரிபொருள் விலை, காப்புறுதி, சூழலியல் விளைவுகள் தானுந்து பகிர்வு பலரைக் ஈர்க்கிறது.

தானே செய்தல்

உணவகம் சென்று உண்ணாமல் தானே சமைத்து உண்ணுதல் பெரும் சேமிப்பு மட்டுமல்ல, ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடும் ஆகும். உணவகம் செல்லும் போது உணவகம் நடத்துவதற்கு, சமைப்பதற்கு, பரிமாறுபதற்கு என எல்லாவற்றுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும்.

தைத்து உடுத்தல் அல்லது கிழிதல்களுக்கு தையல் போடுதல், வீட்டுத் தோட்டம், Book Case போன்ற சில எளிமையான தளபாடங்களை செய்தல் போன்றவை தானே செய்வதற்கு மேலும் சில எடுத்துகாட்டுகள்.

மாற்றுவழிகள்

கட்டணம் செலுத்தி Gym செல்ல வேண்டியது அவசியமில்லை. பூங்காவிற்குச் சென்று ஓடலாம். யோகா செய்யலாம். விளையாட்டில் பங்கெடுக்கலாம்.

திருத்து, மீள்பயன்படுத்து, மீள்ளுருவாக்கு

பயன்படுத்தி எறிவதே இன்றைய சூழலியல் சிக்கல்களுக்கு ஒரு முதன்மைக் காரணம். ஒரு கருவி பழுதாகி விட்டால் எறியாமல், அதை திருத்தி பயன்படுதலாம். ஒரு கருவி மேலும் தேவைப்படாவிட்டால் எறியாமல் பிறருக்கு கொடுக்கலாம், விற்கலாம். தண்ணீர் போத்தல், பொருள் பை போன்ற சில அன்றாட வாழ்வியல் பொருட்களை கழிவில் போடாமல், மீண்டும் பயன்படுத்தலாம்.

விமர்சனங்கள்

நுகர்வு தேவை

உற்பத்தியும் நுகர்வும் வாழ்வின் அடிப்படை. அவையே வாழ்வுக்கு மகிழ்ச்சி தருவன. எனவே சிக்கனமாக நுகர்ந்தால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

இயலாதோரின் கொள்கை

சிக்கனம் என்பது இயலாதோரின் கொள்கை. ஒருவர் உழைத்து அதை செலவு செய்ய அவருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. எதிர்பார்ப்புகளை உயர்த்தி செயற்படுவதே முன்னேற்றத்துக்கு வழிமுறை.

தேவை எது, ஆடம்பரம் எது, யார் தீர்மானிப்பது

உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு ஆகியவை தேவை. ஆனால் இந்த உணவு, உடை, வீடு தான் தேவை என்று கூறுவது கடினம். நகை, மகிழுந்து, பங்களா, சுற்றுலா எல்லாம் ஆடம்பரமா? ஆடம்பரமாக இருந்தாலும் மகிழ்ச்சி தருபவை அல்லவா. எனவே சிக்கனம் என்பது ஒரு ஒப்பு நோக்ககிய கருத்தாக்கம் (relative concept).

இவற்றையும் பாக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.