சாவகத் தொன்னெறி

சாவகத் தொன்னெறி அல்லது கெபத்தினன், கேஜாவென், ஆகம ஜாவா, அலிரான் கெபெர்சயான் என்றெல்லாம் அழைக்கப்படுவது, சாவகத்தின் தொன்மையான சமயநெறி ஆகும். அவர்களின் பழங்குடி நம்பிக்கைகள், விலங்கு - இயற்கை வழிபாடு என்பவற்றுடன், காலங்காலமாக இந்து - பௌத்த - சூபி மரபுகள் இணைந்ததன் விளைவாக இன்று திகழும் நெறியே சாவகத் தொன்னெறி ஆகும்.

ஆலமரங்கீழ் சமாதியில் உள்ள சாவகத் தொன்னெறியர்.இடச்சு ஆட்சிக்காலப் புகைப்படம் (1916).

வரைவிலக்கணம்

சாவக வழக்கில், அந்நாட்டுத் தொன்னெறியானது மேற்கூறிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் போதும், அவை யாவும் ஒன்றல்ல.[1][2] அவற்றுக்கிடையே சிற்சில மாறுபாடுகள் உண்டு:

  • கெபத்தினன்: "உள்குதலின் விஞ்ஞானம்",[2] "உள்நோக்கிய பயணம்"[1] எனப் பொருள்கொள்ளலாம்."மறைந்துள்ள" "அகமுகமான" எனப்பொருளுறும் "பத்தின்" எனும் அராபியச் சொல்லிலிருந்து உருவானது.[3]
  • கேஜாவென்: "சாவக நெறி",[2][4]. இது மத்திய மற்றும் கிழக்கு சாவகத்தாரின் நெறி[5][4] இது சமயம் அல்ல அம்மக்களின் பண்பாட்டு மற்றும் வாழ்க்கைநெறி அம்மக்களின் பொருந்தும்.[6] கெபத்தினன் போலன்றி இது புறவுலகம் சார்ந்தது.[7]
  • ஆகம ஜாவா: "சாவகச் சமயம்"[8]
  • அலிரான் கெபெர்சயான்: "நம்பிக்கை",[9] "பற்று",[1] இப்பெயரில் கெபத்தினன், கேஜாவென், கெரொகனியன் முதலான எல்லாச் சாவகநெறிகளை்யும் உள்ளடக்குகின்றது.[1]

எனினும், "கெபத்தினன்" என்ற பெயரிலேயே இந்நெறிகள் யாவும் பொதுவாக அறியப்படுகின்றன.[7]

வரலாறு

"ப்ரியாயி" வழித்தோன்றல் ஒருவரின் எண்ணெய் ஓவியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு.

பழங்குடிசார் இயற்கை வழிபாடும்[10], இந்து, பௌத்தம், இசுலாம் முதலானவையும் தமக்குள் உரையாடியதன் ஒட்டுமொத்த விளைவாக சாவகத் தொன்னெறி விளங்குகின்றது. தாம் அறிமுகமாகும் மண்ணிலுள்ள பழங்குடி மரபுகளை முற்றாக அழிக்காது, அவற்றுடன் உரையாடி இரண்டறக் கலந்து, தம்மை நிலைப்படுத்தும் வல்லமை வாய்ந்த சைவமும் பௌத்தமும், சாவகத்தொன்னெறியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றின.[11] "ரெசி" (ரிஷியின் திரிபு) எனப்பட்ட அறிவர்கள், இந்நெறியின் சடங்குகளை மேற்கொண்டனர். பல மாணவர் புடைசூழ அவர்களுக்குக் கல்வி போதிக்கும் கடமையையும் அவர்கள் கொண்டிருந்தனர். இதுபோலவே, உரையாடிச் சமரசம் செய்து்கொள்ளும் இசுலாமியப் பிரிவான, சூபி நெறியும், சாவகரின் மனதை வெகுவாகக் கவர்ந்துகொண்டது.[12] சூபி, ஷரீஆ சார்ந்த நூல்கள், ஏலவே இருந்த சைவ-பௌத்த மரபுகளுடன் இணைந்து, சபைமன்றுகளிலும் சமூகத்திலும் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடிந்தது..[12] இயல்பாக மதகுருவின் கட்டாயம் இல்லாதபோதும், இந்தப் பண்பாட்டு உரையாடலால், "ரெசி"களை ஒத்த "க்யாய்" எனும் இசுலாமிய அறிஞரின் மதத்தலைமையை, சாவக இசுலாம் தனக்கென உருவாக்கிக்கொண்டது.[11]

பாரம்பரிய ஊர்தூய்மைசெய் சடங்கு, சாரங்கன், கீழைச் சாவகம்

பெரும்பான்மை இசுலாமாகக் காணப்படும் சாவக நாட்டில், க்யாய்களின் தலைமையில் இசுலாம் வளர்ச்சியுறலாயிற்று. எனினும் பழைமைவாதக் க்யாய்களுக்கும் பிற்காலக் க்யாய்களுக்குமிடையே ஏற்பட்ட பிளவால், அவர்தம் நெறியானது, இருபிரிவுகளாக இன்று இனங்காணப்படுகின்றது.:

  1. சந்திரி அல்லது புதிகன் (தூயோர்) - ஐவேளைத் தொழுகை செய்வோர். இவர்கள் அபாங்ஙனை எதிர்ப்போர். அதிகம் இசுலாமியப் பழங்கொள்கைகளைக்க் கைக்கொள்வோர்.[13]
  2. அபாங்ஙன், (சிவந்தோர்), - இசுலாமிய மரபுகளில் ஆழ்ந்த பற்றுதல் இல்லாதோர்.[14] முந்து இசுலாமிய மற்றும் இந்துக் கொள்கைகளுடன் சமரசமானோர்.[14]

இந்தப் பிரிவுகளுடன், "ப்ரியாயி" எனும் பிரிவையும் சேர்த்து, கிளிப்போர்ட் கீர்ட்ஸ் எனும் மாந்தவியலர், இதை முப்பெரும் பிரிவுகளாக இனங்காண்கின்றார்.[15] ப்ரியாயி என்பது மேல்வகுப்பு அரசவையில் பங்காற்றிய இந்து-பௌத்தர்களின் வழித்தோன்றல்களாவர். அபாங்ஙன் பிரிவுக்கு அடிப்படை இவர்களே என்பது கீர்ட்சின் வாதம்.[16]}}

பண்புகள்

கெபத்தினன் நெறி உள்முகமான பயணம் மூலம், இறையை நாடுதல் எனும் கொள்கை கொண்டது. இதற்கென்று தனியே இறைதூதரோ, தனி நூலோ தனி விழாக்களோ இல்லை. [17][18] இவர்கள் இந்தோனேசியாவின் உத்தியோகபூர்வமான ஆறு நெறிகளில், எந்த ஒன்றுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்.

"இறைவன் ஒருவனே" என வலியுறுத்தும் இந்தோனேசிய அரசியலமைப்பானது, ஏனையக் குறுங்குழு மதங்களையும் சகித்துச் செல்கின்றது. அங்கீகரிக்கப்பட்ட ஆறு பெருநெறிகள் தவிர, 63 குறுஞ்சமயங்கள் சாவகத்திலிருப்பதாக, அந்நாட்டு சமய அலுவல்கள் அமைச்சின் 1953ஆம் ஆண்டு அறிக்கையொன்று சொல்கின்றது. இசுலாம், இந்து, பௌத்தம், உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, கன்பூசியம் ஆகிய ஆறு பெருநெறிகளுடன் கெபத்தினன் நெறியையும் உத்தியோகபூர்வமானதாக, அரசாணை மூலம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு 1973இல் கிடைத்தாலும், அது சமய அலுவல்கள் அமைச்சின் கீழன்றி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழேயே ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றது.[19]

கோயில்களுக்கோ பள்ளிவாசல்களுக்கோ செல்லாது, தாம் விரும்பிய இடங்களில், குறிப்பாக வீடுகளில் அல்லது மலைக்குகைகளில் தம் வீடுபேற்றுக்காக சாவகத்தொன்னெறியர் முயல்வர். வீடுபேற்றுக்கான முயற்சி, "சமாதி" என்றும் "தவம்" என்றும், "நோன்பு" இவர்களால் அழைக்கப்படுகின்றது.[20][21][22] இத்தவமானது, பொதுவாக இருவகைப்படும்.

  • "தப ங்கலோக்" (மரத்தடித் தவம்)
  • "தப குங்கும்" (நதிச்சங்கமங்களில் அல்லது அருவிகளின் கீழ் தவம்)

உப்பான அல்லது இனிப்பான உணவுகளை விலக்கி, நீரும் சோறும் மட்டும் உண்ணல் (தப முதிஃ), திங்கள்-வியாழன் நோன்பு (தப செனென்-கெமிஸ்), 3/5/7 நாட்களுக்கு நெடுநாள் நோன்பு (தப ங்ஙெப்ளெங்) என்று இவர்களின் நோன்பானது, மூன்று விதத்தில் அழைக்கப்படுகின்றது.

உசாத்துணைகள்

  1. Caldarola 1982, பக். 539, note 30.
  2. Ooi 2004, பக். 719.
  3. Levenda 2011, பக். 72.
  4. Mulder 2005, பக். 16.
  5. Oey 2000, பக். 58-59.
  6. Mulder 2005, பக். 17.
  7. Levenda 2011, பக். 73.
  8. Caldarola 1982, பக். 501.
  9. Hooker 1988, பக். 196.
  10. Muhaimin 2006, பக். 2.
  11. van der Kroef 1961.
  12. van Bruinessen 2000a.
  13. Mulder 2005, பக். 15-16.
  14. Mulder 2005, பக். 15.
  15. Mulder 2005, பக். 21-22.
  16. Mulder 2005, பக். 21.
  17. Choy 1999.
  18. Masud 2009, பக். 148.
  19. Choy 1999, பக். 112.
  20. Retsikas 2012, பக். 179.
  21. Hughes-Freeland 2008, பக். 189.
  22. Christomy 2008, பக். 171.

சான்றுகள்

மேலதிக வாசிப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.