சார்பெழுத்து

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது.

"சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல் எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்று" என்று தொல்காப்பியர் இதனை விளக்குகிறார். (பிறப்பியல்)

தாய்தந்தையரைச் சார்ந்து குழந்தை வாழ்வது போல இந்தச் சார்பெழுத்துக்கள் உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து வாழும்.

உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆகமொத்தம் 30 எழுத்துக்கள் முதல்-எழுத்துக்கள். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் சார்பெழுத்துக்கள் மூன்று என்கிறது.. அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன.

ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நன்னூல் சார்பழுத்துக்கள் 10 வகை [1][2] எனக் காட்டுகிறது. இந்த 10 என்னும் பாகுபாட்டுக்குத் தொல்காப்பியத்தில் தோற்றுவாய் உள்ளது. அவற்றை இப்பட்டியலில் காணலாம்.

நன்னூல்தொல்காப்பியம நூற்பாதொல்காப்பிய நூற்பா வரிசை எண்
உயிர்மெய்உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா1-2-27
ஆய்தம்தொல்காப்பியர் காட்டிய மூன்றில் ஒன்று-
உயிரளபெடைகுற்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே1-2-7
ஒற்றளபெடை--
குற்றியலிகரம்தொல்காப்பியர் காட்டிய மூன்றில் ஒன்று-
குற்றியலுகரம்தொல்காப்பியர் காட்டிய மூன்றில் ஒன்று-
ஐகாரக் குறுக்கம்--
ஔகாரக் குறுக்கம்--
மகரக் குறுக்கம்வகரம் மிசையும் மகரம் குறுகும்1-8-25
ஆய்தக் குறுக்கம்ஆய்தம் அஃகும்1-2-7

12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் சொல்காப்பியர் வழியில் சார்பெழுத்துக்கள் 3 எனக் காட்டிச் செல்கிறது. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் சார்பெழுத்துக்கள் 10 என்கிறது. நன்னூலுக்குப் பின்னர் தோன்றிய பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்கள் நன்னூலை வழிமொழிகின்றன.

உயிர்மெய்

க்+அ=க தொடக்கத்தன

ஆய்தம்

எஃகு தொடக்கத்தன முற்றாய்தம்

உயிரளபெடை

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை தொடக்கத்தன

ஒற்றளபெடை

கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் தொடக்கத்தன

குற்றியலிகரம்

நாகு+யாது=நாகியாது தொடக்கத்தன

குற்றியலுகரம்

நாகு அன்று தொடக்கத்தன

ஐகாரக் குறுக்கம்

ஐப்பசி, வலையன், குவளை

ஔகாரக் குறுக்கம்

ஔவை என்பதை அவ்வை என ஒலிக்கும்போது ஔகாரக்குறுக்கம்

மகரக் குறுக்கம்

வரும்வருவாய்

ஆய்தக் குறுக்கம்

அஃகடிய (அவை கடிய)

அடிக்குறிப்புகள்

  1. உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
    அஃகிய இஉ ஐஒள மஃகான்
    தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும். - நன்னூல் 60
  2. உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுஉயர் ஆய்தம்
    எட்டுஉயிர் அளபுஎழு மூன்றுஒற் றளபெடை
    ஆறேழ அஃகும் இம்முப் பானேழ்
    உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
    ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே
    ஆய்தம் இரண்டொடு சார்பெழுத் உறுவிரி
    ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப.- நன்னூல் 61

    வெளிப் பார்வை

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.