சாரங்பூர்
சாரங்பூர் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது காளி சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது. சாரங்பூர் தெஹ்ஸில் உள்ள சாரங்பூர் போபால் பிரிவுக்கு சொந்தமானது. இது மாவட்ட தலைமையகம் ராஜ்கருக்கு தெற்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் சாரங்பூர் தெஹ்ஸிலின் தலைமையகம் ஆகும். தலேனி (4 கி.மீ), தரகஞ்ச் (5 கி.மீ), தர்லகேடி (5 கி.மீ), கச்சிகேடி (5 கி.மீ), பலோடி (6 கி.மீ) ஆகியவை சாரங்பூருக்கு அருகிலுள்ள கிராமங்கள் ஆகும். சாரங்பூர் வடக்கு நோக்கி சாரங்பூர் தெஹ்ஸிலாலும், தெற்கே ஷாஜாபூர் தெஹ்ஸிலாலும், மேற்கு நோக்கி நல்கேடா தெஹ்ஸிலாலும், தெற்கே சுஜல்பூர் தெஹ்ஸிலாலும் சூழப்பட்டுள்ளது. சாரங்பூருக்கு அருகில் உள்ள நகரங்கள் பச்சூர், ஷாஜாப்பூர், சுஜல்பூர் ஆகியவை ஆகும். இந்த நகரம் ராஜ்கர் மாவட்டம் மற்றும் ஷாஜாபூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
வரலாறு
பழமையான வரலாற்று இடங்களின் பட்டியலில் சாரங்பூர் இடம் பெறுகின்றது. பாஸ் பகதூர் மற்றும் ராணி ருபமதி ஆகியோர் இந்த நகரத்தை ஆட்சி செய்தனர். அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் மண்டாவின் ஆட்சியாளர்கள் ஆவார்கள். பாஸ் பகதூருக்கும் அக்பருக்கும் இடையிலான யுத்தம் சாரங்பூரிலும் நிகழ்ந்தது. அந்த போரில் அக்பர் பாஸ் பகதூரை தோற்கடித்து நகரத்தை கைப்பற்றினார். சாரங்பூரில் நிகழ்ந்த போரொன்றில் மேவாரின் ராணா கும்பா என்பவர் குஜராத்தின் சுல்தான் அகமது சா உடன் இணைந்து மால்வா சுல்தான் மெஹ்மூத் கல்ஜியைத் தாக்கினார். இது மால்வா மீது ராணா கும்பா வெற்றிக்கு வழிவகுத்தது.
புவியியல்
சாரங்பூர் நகரம் 23.57 ° வடக்கு 76.47 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 410 மீட்டர் (1345 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரம் காளி சிந்து நதிக் கரையில் அமைந்துள்ளது.
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி சாரங்பூரில் 37435 மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 52% வீதமும், பெண்கள் 48% வீதமும் காணப்படுகின்றனர். சாரங்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 74.54% ஆகும். இது தேசிய சராசரியான 69.32% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 81.79% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 66.87% வீதமாகவும் உள்ளது. சாரங்பூர் மக்கட் தொகையில் 14.67% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.[2]
இந்து மதத்தை பின்பற்றுவோர் 50,43% வீதமும், இசுலாமிய மதத்தை பின்வற்றுபவர்கள் 48,76% வீதமும் உள்ளனர்.
சுவாரசியமான இடங்கள்
பாஸ் பகதூர் மற்றும் ராணி ருபமதி கா மக்பரா அவர்களின் அன்பின் அடையாளமான இந்த ஊர் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும்.
தில்லி மற்றும் போபால் மசூதிகளுக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மசூதியும், மத்தியப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய மசூதியுமான ஷாஹி ஜமா மஸ்ஜித் இந்த நகரில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
சாரங்க்பூரில் பேருந்து சேவை கிடைக்கிறது. சாராங்பூருக்கு ஆக்ரா மும்பை நெடுஞ்சாலை என்.எச் 3 சேவை செய்கிறது. இது மத்திய பிரதேசத்தின் வணிக தலைநகரான இந்தூரிலிருந்து 126 கி.மீ தூரத்திலும், தலைநகரான போபாலில் இருந்து 160 கி.மீ தூரத்திலும் உள்ளது.