சாஃபக்கிளீசு
சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406) ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் ஆவார். இன்றும் கிடைக்கின்ற ஆக்கங்களை எழுதிய பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர்கள் மூவருள் இவர் இரண்டாமவர். இவருடைய முதல் நாடகம் ஏஸ்கலஸ் (Aeschylus) என்னும் பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகாசிரியர் எழுதிய நாடகங்களுக்குப் பிற்பட்டதும், இயூரிபிடீஸ் (Euripides) என்னும் இன்னொரு பண்டைக் கிரேக்க நாடகாசிரியருடைய நாடகங்களுக்குப் முந்தியதும் ஆகும். சூடா என்னும் பத்தாம் நூற்றாண்டுக் கலைக்களஞ்சியம் ஒன்றின்படி, சாஃபக்கிளீசு தனது வாழ்நாளில் 120க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியதாகத் தெரிகிறது. ஆனாலும், இவற்றுள் ஏழு நாடகங்கள் மட்டுமே இன்று முழுமையாகக் கிடைக்கின்றன. இவை, அஜாக்ஸ், அன்டிகனி, டிரக்கினியப் பெண், அரசன் எடிப்பசு, எலெக்ட்ரா, பிலாக்டெட்டீஸ், கொலோனசில் எடிப்பசு ஆகியவையாகும்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளாக, அக்காலத்து ஆதென்சில் நடைபெற்றுவந்த லெனேயா, டயனீசியா போன்ற விழாக்களில் நடைபெற்ற நாடகப் போட்டிகளில் அதிக பரிசு பெற்ற நாடகாசிரியர் இவரேயாவார். சாஃபக்கிளீசு பங்குபற்றிய சுமார் 30 நாடகப் போட்டிகளில் 24ல் இவர் வென்றிருக்கக்கூடும் என்றும் எதிலுமே இரண்டாம் பரிசுக்குக் கீழ் எடுத்தது இல்லை எனவும் சொல்லப்படுகிறது. ஏஸ்கலஸ் 14 போட்டிகளில் வென்றுள்ளார். இயூரிபிடீஸ் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றார்.