சல்லியங்குமரனார்

சல்லியங்குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது நற்றிணை 141 எண் கொண்ட பாடல். (பாலைத் திணை)

பாடல் சொல்லும் செய்தி

பொருள் தேடச் செல்ல நினைத்த தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்.

நெஞ்சே! கோடையிலும் காட்டைக் கடந்து பொருள் தேடச் செல்லத் உனக்கு எளிது. ஆனால், அரிசில் ஆற்று மணல் படிவு போல் அழகாகத் தோன்றும் கூந்தலை உடைய என்னவளை (என் காதலியை) விட்டு நான் வரமாட்டேன் - என்கிறான்.

தவசியர்

தவசியர் நீண்ட சடைமுடியோடு இருப்பார்களாம். (தவம் செய்வதில் கவனம் செலுத்தும் இவர்கள்) நீராடுவது இல்லையாம்.

உவமை

சேற்றில் குளித்த யானை மழையில் நனைந்துகொண்டிருக்கும்போது கொன்றைப்பூ அதன் இடையில் தொங்கினால் எப்படி இருக்குமோ அப்படித் தவசியரின் சடை தொங்குமாம்.

பாண்டில்

  • பாண்டில் = பாண்டியன், காளைமாடு, மாட்டுவண்டி (இந்தப் பாடலில் பாண்டியனைக் குறிக்கிறது) இந்தப் பாண்டில் அம்பர் நகருக்கு வந்து தாக்கினான். போரில் தோல்வியுற்றான்.

கிள்ளி

இந்தப் பாடலில் வரும் கிள்ளி இசைவெங்கிள்ளி என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறான். ஆம்பர் நகருக்கு வந்து தாக்கிய பாண்டில் அரசனை வென்றான்.

அம்பர்

அரிசில் ஆற்றங்கரையில் இருந்த இந்த ஊர் அம்பரை ஆண்டவன் கிள்ளி. இவ்வூரைத் தாக்கிய அரசன் பாண்டில்.

அரிசில்

அரிசில் என்பது ஓர் ஆறு. காவிரி ஆற்றின் கிளை ஆறு. வெள்ளம் குறைந்த காலத்தில் இதன் மணல் அறல் அறலாகப் படிந்து அழகாகக் காணப்படும். இந்த மணல்-படிவைப் புலவர் தன் பாடல் தலைவியின் கூந்தலுக்கு உவமையாக்கிக்கொண்டுள்ளார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.