சரசோதி மாலை
சரசோதி மாலை என்பது ஒரு சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
பராக்கிரம பூபன் எனப் பாடல் குறிப்பிடும் அரசன் பராக்கிரம பாகு என்னும் பெயருடன் இலங்கையில் ஆண்ட அரசன்.தம்பை என்னும் ஊர் அன்று ஈழத்திற் காணப்பட்ட தம்பதெனிய என்னும் இராசதானி என ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி என்பவன் சிங்கள அரசனின் தலைநகரான அநுராதபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கருவூலப் பொருள்களை அள்ளிச் சென்றான் என்றும், சிங்களத்தை ஆண்ட பராக்கிரம பாகு அவனிடம் சமாதானம் செய்துகொண்டு, ஆரிய சக்கரவர்த்தி கைப்பற்றிய ஊர்களைத் திரும்பப் பெற்றான் என்றும் கூறுவர்.[1]
இந்த நூலில் 12 படலங்கள் உள்ளன. இதில் விவாக கால நியதி, அக்கினி, ஆதானம், நெல் விதைத்தல், மகுடன் புனைதற்குரிய திறந்த, யுத்த யாத்திரை, ஆயுர் யோகம், அபிசித்து முகூர்த்தம் போன்ற பல்வேறு விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நூலில் பராக்கிரமபாகு மன்னனைப் போற்றிய பல செய்யுள்களும் உள்ளன.[2]
சந்தான தீபிகை என்னும் சோதிட நூலை இயற்றிய யாழ்ப்பாணத்து இராமலிங்கையர் என்னும் சோதிடர் இதனைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
அடிக்குறிப்பு
- மு. இராகவையங்கார், பெருந்தொகை, பக்கம் 602.
- மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005