சமன்நீக்கி மோதல்

காற்பந்தாட்டத்தில் சமன்நீக்கி மோதல் (Penalty shootout) ஒரே எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் இரு அணிகளுக்கிடையே வெற்றியாளரைத் தெரிவுசெய்ய பயன்படுத்தப்படும் முறையாகும்.

2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் பிலிப் லாம் பந்தடித்தல்
2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் வெற்றியை முடிவு செய்த டிடியர் திரோக்பாவின் தண்ட உதை

ஒரு காற்பந்தாட்டம் 90 நிமிடங்கள் நடந்தபின்னர் இரு அணிகளும் சமனாக இருந்தால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படும். இந்த கூடுதல் நேரத்திற்குப் பின்னரும் ஆட்டம் சமனாக இருந்தால், சமன்நீக்கி மோதல் செயற்படுத்தப்படும். பொதுவாக ஒவ்வொரு அணிக்கும் ஐந்து தண்ட உதைகள் வழங்கப்படும். எந்த அணி இவற்றில் கூடுதலாக இலக்கை அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர். இந்த ஐந்திலும் இரு அணிகளும் சமனாக இருப்பின், ஒவ்வொரு அணியும் மாற்றி மாற்றி தண்ட உதையை எடுத்துக் கொள்ளும். யார் முதலில் முன்னணிநிலை எய்துகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவர்.

சமன்நீக்கி மோதல்கள் பொதுவாக கோப்பை போட்டிகளில் தான் செயற்படுத்தப்படுகின்றன. கூட்டிணைவு போட்டிகளில் சமனாக முடியும் ஆட்டங்களில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. கோப்பைப் போட்டிகளில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வெற்றியாளரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

பல புகழ்பெற்ற இறுதியாட்டங்கள் சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. 2006 உலகக்கோப்பை இறுதி, 2005 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதி மற்றும் 1994 உலகக்கோப்பை இறுதி அவற்றில் சிலவாம்.

உசாத்துணை

ஃபிஃபா ஆட்டச் சட்டங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.