கோல்-கோடு தொழினுட்பம்
காற்பந்தாட்டத்தில், கோல்-கோடு தொழினுட்பம் (goal-line technology அல்லது Goal Decision System[1]) எனப்படுவது கால்பந்து கோல்கோட்டை எப்போது முழுவதுமாகத் தாண்டியது என்பதை இலத்திரனியல் கருவிகளின் உதவியுடன் கண்டறியும் முறையாகும். இது ஆட்ட நடுவருக்கு ஆடும் அணி கோலிட்டது அல்லது கோல் இடவில்லை என அறிவிப்பதற்கு உதவி புரியும். இந்த தொழினுட்பத்தின் நோக்கம் ஆட்ட நடுவர்களின் பங்கைக் குறைப்பதில்லை; மாறாக அவர்கள் ஓர் முடிவிற்கு வரத் துணைபுரிவதாயிருக்கும். இந்தத் தொழினுட்பம் ஆட்டநடுவருக்கு பந்து முழுமையாக கோல் கோட்டை தாண்டியதா அல்லவா என்பதைக் தெளிவாக அறிவிக்கும். அதனைக் கொண்டு நடுவர் இறுதி முடிவை எடுப்பார்.[2] இங்கிலீஷ் பிரீமியர் லீக், 2010 உலகக்கோப்பை கால்பந்து மற்றும் யூரோ 2012 போட்டிகளின்போது நடுவர் முடிவுகள் குறித்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து இதனை எதிர்த்து வந்த பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு மாற்றுத் தயாரிப்புக்களை சோதனையிட்டு ஏற்கத்தக்க அமைப்பை அறிவித்துள்ளது. கோல்கன்ட்ரோல் என்ற செருமானிய நிறுவனத்தின் கோல்கன்ட்ரோல்-4D தொழினுட்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது ஒவ்வொரு கோல் கம்பத்திலும் ஏழு வீதம் 14 ஒளிதப்பிடி கருவிகளை அமைக்க உள்ளது.[3] இது 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட உள்ளது.

மேற்சான்றுகள்
- "Wenger praise for Goal Decision System". PremierLeague.com (8 August 2013). பார்த்த நாள் 10 August 2013.
- FIFA (2012). "Testing Manual". FIFA Quality Programme for Goal Line Technology. http://www.fifa.com/mm/document/fifaqualityprogramme/goal-linetechnology/01/66/02/89/glt_testing_manual_2012.pdf.
- "Fifa chooses GoalControl-4D for goal-line technology trial". மெட்ரோ (ஏப்ரல் 2, 2013). பார்த்த நாள் 19 சனவரி 2014.