கோலி

கோலி அல்ல போளை எனப்படுவது ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும். இவை சிறுவர்களால் பல்வேறு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இது பொருள் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த விழா பற்றிய கட்டுரையைக் காண: ஹோலி என்பதை காணவும்
கைகளால் செய்யப்பட்ட கோலிகள், மேற்காபிரிக்காவிலிருந்து

தமிழ்நாட்டில் கோலிக்குண்டு

கோலிக்குண்டைப் பிடித்து அடிக்கும் முறை

கோலிக்குண்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர். குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் அரங்கு அமைக்கப்படும். குழி குதிக்காலால் திருகிக் குண்டு தங்கும் ஆழத்துக்கு அமைக்கப்படும்.

உருண்டையான கூழாங்கற்களையும், செங்கலை உடைத்து, உரைத்துச் செய்த கூழாங்கற்களையும் கோலிக்குண்டாகப் பயன்படுத்துவர். வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு அதனையும் பயன்படுத்தலாயினர்.

கட்டை-விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் விசையால், மற்றொரு கை பிடித்திருக்கும் கோலிக்குண்டை அடிக்கும் முறையைப் படத்தில் காணலாம்.

தமிழ்ச்சொல்
கோல் என்னும் சொல்லுக்குத் தமிழில் வளைவு என்னும் பொருள் உண்டு. வளைந்த உருப்பொருளைக் கோலி என்பது தூய தமிழ்ச்சொல். குண்டு என்பதும் அவ்வுருப்பொருளைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல். இப்படி ஒருபொருள் குறித்த பல சொற்கள் இணைந்து அமைவது தமிழ்-இலக்கண வகையில் ஒருபொருள் பன்மொழி எனப்படும்.
தொன்மை
“அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401) பகுதியில் “குண்டு உருட்டுதல்” எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை இந்த விளையாட்டு கிறிஸ்துவுக்கு முன்னரே விளையாடப்பட்டதைக் காட்டுகிறது.
நாகார்சுனா-கொண்டா பழங்குடியினர் இந்த விளையாட்டை விளையாடியதை இக்குவாசு காலத்துச் சிற்பங்கள் உணர்த்துகின்றனவாம்.
எகிப்து நாட்டில் குண்டு விளையாடப்பட்டதைக் காட்டும் புடைப்போவியங்கள் அந்நாட்டில் உள்ளனவாம்
குழியாட்டம்
ஒருகுழியாட்டம் – சுவரோரம் அரையடி தள்ளிப் போடப்பட்ட குழிக்குச் சுமார் பத்தடி தொலைவிலிருந்து குண்டுகளை உருட்டி விளையாடுவது.
முக்குழியாட்டம் – சுமார் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நேர்கோட்டில் மூன்று குழிகள் போட்டு அதில் குண்டுகளைப் போட்டும், அடித்தும் விளையாடுவது.
பேந்தா-ஆட்டம் – சுமார் 50-க்கு 30 சென்டி-மீட்டர் அளவுள்ள செவ்வகம் நீள-வாக்கில் இரண்டாகப் பகுக்கப்படும் நடுக்கோடு போடப்பட்டது இந்த ஆட்டத்தின் அரங்கம். குண்டு கோட்டில் நிற்காமல் உருட்டி 10 புள்ளிகள் (பழம்) சேர்ப்பது இந்த விளையாட்டு.
பழம்
பொதுவாக விளையாட்டில் வெற்றி பெற்றவரைப் பழம் பெற்றவர் என்பது வழக்கம். இந்த விளையாட்டில் 10 புள்ளி பெற்றவர் பழம். பழம் பெற்றவர் விளையாட்டிலிருந்து விலகிக்கொள்வார். அல்லது மேலும் புள்ளி ஈட்டாமல் தன் குண்டுகளை அடித்துத் தனக்கு வேண்டியவர் பழம் ஆக உதவலாம்.
தோற்றவருக்குத் தண்டனை
பழம் ஆனவர்களுக்குப் பரிசு ஒன்றும் இல்லை. ஆனால் தோற்றவருக்குத் தண்டனை உண்டு. தோற்றவர் குண்டைப் பழம் பெற்றவர் அனைவரும் ஒவ்வொரு முறை அடித்துத் தொலைதூரம் தள்ளுவர். அங்கிருந்து தோற்றவர் தன் குண்டைத் தன் புறங்கை முட்டியால் உத்திக்குழி வரையில் தள்ளிக்கொண்டு வரவேண்டும்.

காட்சிகள்

அடிக்குறிப்பு

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.