கோதிக் மொழி


கோதிக் மொழி ஒரு அழிந்துவிட்ட ஜெர்மானிய மொழியாகும். இது பண்டைய கோத் இனத்தவரால் பேசப்பட்டு வந்தது. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கோர்டெக்ஸ் ஆர்ஜெண்ட்டியஸ் (Codex Argenteus) என்னும் பைபிள் மொழிபெயர்ப்பு நூலின் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரதி ஒன்றே இம் மொழி பற்றிய தகவல்களின் முக்கிய மூலமாகும். குறிப்பிடத்தக்க அளவில் தகவல்களைக் கொண்டுள்ள ஒரே கிழக்கு ஜேர்மானிய மொழி இதுவே. இக் குழுவைச் சேர்ந்த பிற மொழிகளான பர்கண்டிய மொழி, வண்டாலிய மொழி போன்றவை வரலாற்று நூல்களிலுள்ள மிகக் குறைவான தகவல்களின் மூலம் மட்டுமே அறியப்படுகின்றன.

கோதிக் மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-2got
ISO 639-3got

ஒரு ஜெர்மானிய மொழி என்ற வகையில் இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம் மொழியிலுள்ள மிகவும் பழைய ஆவணம் கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் இம்மொழியின் அழிவு தொடங்கியது எனக் கருதப்படுகின்றது. ஃபிராங்குகளின் படையெடுப்பினால் கோத்துகளுக்கு ஏற்பட்ட படுதோல்வியும், அதனைத் தொடர்ந்து கோத்துக்கள் இத்தாலியிலிருந்து விரட்டப்பட்டதும், இவர்கள் பெருமளவில் ரோமன் கத்தோலிக்கத்துக்கு மதம் மாறியமையும் இம் மொழியின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றது.

வரலாறும் சான்றுகளும்

கோடெக்ஸ் அம்புரோசியானுஸ் பி (Codex Ambrosianus B) இலிருந்து ஒரு பக்கம்

இம் மொழியில் கிடைத்துள்ள மிகக் குறைந்த அளவு ஆவணங்கள் இம் மொழியை முழுமையாக மீட்டுருவாக்கப் போதியன அல்ல.

  • கிடைக்கும் ஆவணங்களுள் பெரும்பாலானவை, அன்றைய ரோமப் பேரரசின் மாகாணமான மொயேசியாவில் (Moesia) (இன்றைய பல்கேரியாவும், ருமேனியாவும்) இருந்த விசிகோத்தியக் கிறித்தவர்களின் தலைவரும் மேற்றிராணியாருமான அரியான் (Arian) என்பவரால் எழுதப்பட்டது. இவர் பைபிளின் கிரேக்க மொழிப் பதிப்பை கோதிக் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்தார். இதில், புதிய ஏற்பாட்டில் முக்கால் பங்கும், பழைய ஏற்பாட்டில் சில பகுதிகளும் மட்டுமே கிடைத்துள்ளன.
  • முந்திய காலத்தில் கோதிக் மொழியை எழுதப் பயன்பட்ட ரூனிக் (runic) வரிவடிவில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் சிலவும் அறியப்பட்டுள்ளன ஆயினும் இது கோதிக் மொழியே அல்ல என்பாரும் உள்ளனர்.
  • கி.பி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எண்பது சொற்களைக் கொண்ட சிறிய அகரமுதலி ஒன்றும், மொழி பெயர்க்கப்படாத பாடலொன்றும் கிடைத்துள்ளது. இது ஓட்டோமான் பேரரசின் தலைமையிடமான இஸ்தான்புல்லில் ஹப்ஸ்பர்க்கின் தூதுவராக இருந்த ஆகியெர் கிசேலின் டி புஸ்பெக் (Ogier Ghiselin de Busbecq) என்பவரால் தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் அவர்சந்தித்த இரு கிரீமிய கோதிக் மொழி பேசியோரிடம் இருந்து அறிந்து கொண்டவையே அவை ஆதலால், இதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட கோதிக் மொழியை இது ஒத்திருக்காது என்றும் கருதப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.