கோண்மா நெடுங்கோட்டனார்

கோண்மா நெடுங்கோட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 40 எண்ணுள்ள பாடல்.

கோண்மா நெடுங்கோடு

புலவர் பெயர் விளக்கம்

  • பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர்

ஏறு தழுவிக், கொள்ளப்படும் காளைகள் 'கோண்மா'(கோள் மா) எனப்படும். அதன் கொம்பு என்ன செய்யும்? தழுவுவோரைக் குத்துமல்லவா? அதுபோலக் கணவணின் செயல் மனைவியைக் குத்துவதாக அமைந்துள்ளதைப் பாடலில் காணலாம். இப்படிப்பட்ட செய்தியைப் பாடலாக்கிச் சொன்னதால் பாடற்பொருளை மையமாகக் கொண்டு இவருக்குப் பெயரிட்டுள்ளனர்.

பாடல் சொல்லும் செய்தி

மனைவி மகனைப் பெற்றிருக்கிறாள். இந்த மகிழ்வைக் கணவன் பரத்தையிடம் பகிர்ந்துகொள்கிறான். (இது தவறு அல்லவா? இதனைக் குத்திக் காட்டிச் சொல்வதுதான் 'கோண்மா நெடுங்கோடு')

பழக்க வழக்கம் (வீட்டில் குழந்தை பிறந்திருக்கும்போது நிகழ்வன)

  • வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பெரிய மணி அடிக்கப்படும்.
  • வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்படும்.
  • அங்குப் பந்தல் போடப்படும்.
  • பந்தலில் பாணன் (பாட்டுப் பாடிக்கொண்டு) காவல் இருப்பான்.
  • மற்றொரு பக்கத்தில் 'திருந்திழை'(தாலி, மங்கல நாண்) அணிந்த மகளிர் விரிச்சி நிகழ்வுக்காகக் காத்திருப்பர்.
  • மணம் கமழும் மெத்தையில் பிறந்த மகன் செவிலியுடன் உறங்குவான்.
  • பெற்ற தாய் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவாள்.
  • தாயை ஐயவி என்னும் கடுகு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டித் தூங்க வைத்திருப்பார்கள்.
  • உறங்கும்போது அவளது உடம்பில் பசுநெய் தடவப்பட்டிருக்கும்.

பரத்தையின் பெருமித மொழி

வீட்டில் மனைவிக்குத் தன் குழந்தை பிறந்திருக்கிறது. கணவன் கள்வன் போல வீட்டை விட்டு அகன்று பரத்தை இல்லம் சென்றுள்ளான். (அவன் தனக்குக் குழந்தை பிறந்துள்ள மகிழ்வைப் பரத்தையோடு பகிர்ந்துகொள்கிறான்.) இந்தச் செய்தியைக் குழந்தை பெற்ற தாயின் சுற்றத்தார் கேட்கும்படி பரத்தை கூறுகிறாள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.