கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு
கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு என்பது, இயற்கை நறுமணப் பொருட்கள் போன்ற வெப்பநிலை உணர்திறன் உள்ள பதார்த்தங்களை வேறுபடுத்தப் பயன்படும் ஒரு சிறப்பான காய்ச்சி வடிப்பு முறையாகும்.

உயர் வெப்பநிலைகளில் பல சேதனச் சேர்வைகள் அமைப்பழிந்து போகும். எனவே சாதாரண காய்ச்சி வடிப்பு முறைகளைப் பயன்படுத்த முடியாது. இதனால், இச் செயன்முறைக்கு நீர் அல்லது கொதிநீராவி பயன்படுத்தப்படுகிறது. நீராவியைச் சேர்ப்பதன் மூலம், சேர்வையின் கொதிநிலை குறைக்கப்பட்டு அதன் அமைப்பழியும் வெப்பநிலையிலும் குறைந்த வெப்பநிலையில் ஆவியாகச் செய்யப்படுகிறது. காய்ச்சி வடிக்கப்படவேண்டிய பதார்த்தம் வெப்பத்துக்கு மிகவும் உணர்திறனுடையதாயின், கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்புடன், வெற்றிடக் காய்ச்சி வடிப்பும் பயன்படுத்தப்படும். காய்ச்சி வடிப்பின் பின்னர், ஆவிகள் ஒடுக்கப்படும். பின்பு எளிய வேறாக்கல் மூலம் நீர் மற்றும் சேதனச் சேர்வையின் ஈரவத்தைக் கலவை வேறாக்கப்படும்.
கொள்கை[1]
ஒன்றுடனொன்று கலவாத இரு திரவங்களின் கலவை வெப்பப்படுத்தப்படும்போது, ஆவிக் கலவையிலுள்ள ஒவ்வொரு கூறும் தனித்தனியே அவற்றின் ஆவியமுக்கங்களைப் பிரயோகிக்கும். இதனால் தொகுதியின் மொத்த ஆவியமுக்கம் அதிகரிக்கும். இவ்விரு திரவங்களினதும் ஆவியமுக்கங்களின் கூட்டுத்தொகை வளிமண்டல அமுக்கத்துக்குச் சமனாகும்போது (கடல் மட்டத்தில் அண்ணளவாக 101kPa) கலவை கொதிக்கத் துவங்கும். இந்த வகையில், நீரில் கரையாத பல சேதனச் சேர்வைகளை அவற்றின் அவற்றின் அமைப்பழியும் வெப்பநிலைக்குக் குறைவான வெப்பநிலையிலேயே பிரித்தெடுக்க முடியும். உதாரணமாக, புரோமோ பென்சீனின் கொதிநிலை 156 °Cயும், நீரின் கொதிநிலை 100 °Cயும் ஆகும். எனினும், இவற்றின் கலவை 95 °Cஇலேயே கொதிக்கத் துவங்கும். இதனால், புரோமோ பென்சீனை அதன் சாதாரண கொதிநிலையிலும் மிகவும் குறைந்த வெப்பநிலையான 61 C°யிலேயே இலகுவாகப் பிரித்தெடுக்க முடியும்.
பிரயோகங்கள்
நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்குத் தேவையான வாசனை நெய்களின் தயாரிப்பில் கொதிநீராவிக் காய்ச்சி வடிப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், தேவையான எண்ணெயைக் கொண்டுள்ள தாவரப் பகுதிகளினூடாக நீராவி செலுத்தப்படும். கைத்தொழிற் துறையில், யூகலிப்டஸ் எண்ணெயும், ஒரேஞ் எண்ணெயும் பெறப்படுகிறது. சிக்கலான சேதனச் சேர்வைகளில் தொகுப்பின்போது இடை விளைவுகள் அல்லது இறுதி விளைவுகளை வேறுபடுத்தவும் கொதிநீராவிக் காய்ச்சி வடிப்பு பயன்படுகிறது.
பெற்றோலியச் சுத்திகரிப்பு மற்றும் பெற்றோரசாயன நிலையங்களிலும் கொதிநீராவிக் காய்ச்சி வடிப்பு பரவலாகப் பயன்படுத்தப்படும்.[2][3][4]
உபகரணங்கள்
ஆய்வுகூடங்களில் வடிப்புத் தொகுதிக்கு வெளியிலிருந்து பிறப்பிக்கப்படும் நீராவியின் மூலமாக கிளெவெஞ்சர் வகை உபகரணத்தைப் பயன்படுத்தி காய்ச்சி வடிப்பு மேற்கொள்ளப்படும்.[5]
மேலும் பார்க்க
- மாறாக்கொதிநிலைக் காய்ச்சி வடிப்பு
- Batch distillation
- காய்ச்சி வடிப்பு
- Extractive distillation
- பகுதிபடக் காய்ச்சி வடிப்பு
- Heteroazeotrope
- Herbal distillates
- ஆய்வுகூட உபகரணம்
- நீராவி இயந்திரம்
- Supercritical fluid extraction
- Theoretical plate
மேற்கோள்கள்
- Martin's Physical Pharmacy & Pharmaceutical sciences, fifth edition, ISBN- 0-7817-6426-2, Lippincott williams & wilkins
- Beychok, M.R., The Design of Sour Water Strippers, Individual Paper 61, Proceedings of Seventh World Petroleum Congress, Mexico City, April 1967
- Kister, Henry Z. (1992). Distillation Design (1st Edition ). McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-034909-6.
- Sour Water Steam Stripper Schematic Diagram
- Walton & Brown, Chemicals From Plants, Imperial College Press, 1999.