கே. எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்)

கே. எஸ். பாலச்சந்திரன் (மருதங்கேணி,பளை, இலங்கை) ஈழத்தின் மெல்லிசைப் பாடகர்களில் ஒருவர். வானொலிக் கலைஞர்.

கே. எஸ். பாலச்சந்திரன்
பிறப்புமருதங்கேணி, பளை,  இலங்கை
பணிஇசைக்கலைஞர், பாடகர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சிற்றம்பலம்(வல்வெட்டித்துறை), சின்னப்பிள்ளை(மருதங்கேணி) தம்பதிகளின் புதல்வர். போராளிக்கலைஞர் மேஜர் சிட்டுவின் சகோதரன். மருதங்கேணியில் பிறந்து வளர்ந்தவர். 17வயதுக்குப் பின் திருகோணமலைக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வாழ்வு அமைத்துக் கொண்டவர். 1985 இல் இருந்து ஜேர்மனியில் வட்கசன் நகரில் வசித்து வருகிறார்.

மெல்லிசைப் பாடல்கள்

இவர் சிறுவயதிலேயே பரமேஸ், கோணேஸ் சகோதரர்களின் இசை நிகழ்ச்சிகளில் மேடையேறிப் பாடினார். ஒரு சமயம் கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இவர் பாடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் மெல்லிசை ஆர்வலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இவரின் குரல் வளத்தைக் கண்டு இவரை அழைத்து இலங்கை வானொலியின் ஒரு விளம்பரத்துக்குப் பாட வைத்தார்கள். இப்படியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குள் பிரவேசித்த இவர் அங்கு நடந்த ஒரு மெல்லிசைப் பாடகர் தேர்வில் கலந்து கொண்டார். குரலில் நல்ல வளம் மிக்க இவர் முதல் தரத்திலேயே மோகன்ராஜ் இன் தந்தை ஆர். முத்துச்சாமி அவர்களால் தேர்வு செய்யப்பட்டு மெல்லிசைப் பாடகர் ஆனார். இவரது முதற்பாடல் இசைக்காய் நான் உனது இதயத்தை... என்று தொடங்கும் பாடல். தற்சமயம் ஜேர்மனியின் பல பாகங்களிலும் அரங்கேறி இசை நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கிறார்.

இவர் திரைப்படப் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். இவர் பாடிய முதல் திரைப்படம் புதிய காற்று.

பாடிய சில மெல்லிசைப் பாடல்கள்

  • பெற்ற மனம் பித்து என்பார் பிள்ளை மனம் கல்லு என்பார்... (வரிகள்:ஈழத்து இரத்தினம், இசை: மோகன்ராஜ்)
  • இசைக்காய் நான் உனது இதயத்தை...
  • தாயான உன்னை நோயாளி ஆக்கி தரை மீது வந்தேன் அம்மா...
  • சந்திர முகம் உனதோ சிந்திடும் நிழல்.. (இசை: மோகன்ராஜ்)
  • அன்னைக்கு இல்லாத பாசமா... (வரிகள்: ஈழத்து இரத்தினம்)

பாடிய சில திரைப்படப் பாடல்கள்

இசைக்குழு

இவர் மிகவும் பிரபலமாக இருந்த சுண்டிக்குளி இராஜன் இசைக்குழுவின் இயக்குனராகவும் இருந்தார். முதலில் இந்த இசைக்குழுவை இயக்கி வந்த குணசேகரன்(பொறியியலாளர்) என்பவரே இவரிடம் இந்த இசைக்குழுவைக் கையளித்தார்.

சுவையான தகவல்

ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது எத்தணை சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் இந்த மெல்லிசைப் பாடகர் கே. எஸ் . பாலச்சந்திரனும், அண்ணை றைற் கே.எஸ். பாலச்சந்திரனும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இப்போதும் பலருக்கு இவர்களை யார் யாரென இனம் காணுவதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே கே. எஸ் . பாலச்சந்திரன்தான்.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.