கூடலூர் கிழார்

கூடலூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 4 உள்ளன. அவை குறுந்தொகை 166, 167, 214, புறநானூறு 229 ஆகியவை. இப்பாடல்கள் தரும் செய்திகளைத் தொகுத்துக் காணலாம்.

எரிமீன் விழுதல்

புறம் 229

கணியம் (சோதிடம்)

எரிமீன் ஒன்று வீழ்ந்த நாளைக் கணித்துப் பார்த்த இந்தக் கூடலூர் கிழார் இந்த ஊரை ஆண்டுவந்த அரசன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும்(இறந்துவிடுவான்) எனக் கண்டறிந்தார். தான் கணித்த அதே நாளில் அந்த அரசன் இறந்துபோனது கண்டு வியந்து பாடிய பாடல் இது.

எரிமீன் விழுந்த நாள்

எரிமீன்

பங்குனி மாதம். மேழம் என்னும் சித்திரை வரப்போகிறது. கார்த்திகை நட்சத்திரம். முதல்கால்(முதல்பாதம்). நள்ளிரவு. அந்த ஆண்டில் முதல் 15 நாட்கள் அனுஷ்ட நாளில் தொடங்கி, புனர்பூச நாளில் முடிந்தன. இடைப்பட்ட நடுமீன் மூலம் நாளில்(நட்சத்திர நாள்)எரிமீன் வீழ்ந்தது.

'ஆடியல் அழற் குட்டத்து, ஆரிருள் அரை இரவில், முடப்பனையத்து வேர் முதலாகப், பங்குனி உயர் அழுவத்துத், தலைநாள்மீன் நிலை திரிய, நிலை நாள்மீன் அதன் எதிர் நேர்தரத், தொல் நாள்மீன் துறை படியப், பாசி செல்லாது, ஊசி முன்னாது, அளக்கர்த் திணை விளக்காகக், கனை எரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி, ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே' - என்பது பாடலில் உள்ள பகுதி.

  • ஆடு = மேழம் = சித்திரை
  • அழற்குட்டம் = கார்த்திகை
  • முடப்பனை = அனுஷ்ட நாள்
  • பாசி = அகழி = அகழி போன்ற தொடக்க நாள் (பிராசி - வடசொல்)
  • ஊசி = ஊசிமுனை போன்ற உச்சநாள்
  • அளக்கர் திணை = கடலால் சூழப்பட்ட நிலவுலகு
  • கால் = காற்று
சங்ககாலத்தில் இக்கால அறிவியல்

'கனையெரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன்றால் விசும்பினானே' - இவை பாடலிலுள்ள அடிகள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் வரிசைமுறை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழம், சனி, யுரானஸ், நெப்ட்யூன் என அமைந்துள்ளது. (புளூட்டோ கோள் அன்று என ஒதுக்கிவிட்டனர்).

செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையில் விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு எப்போதாவது செவ்வாய்க் கோளையும் தாண்டி பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வந்துவிடும். அப்போது பூமியைச் சூழ்ந்துள்ள காற்றுமண்டலத்தில் உரசும்போது தீப்பற்றி எரிந்து விழும். இதனை எரிமீன் என்கிறோம்.

கால் என்னும் சொல் காற்றைக் குடிக்கும். காற்றை எதிர்த்ததால் மீன் எரிந்ததாகப் பாடல் கூறுவதில் இக்கால அறிவியல் உண்மையை அக்காலத் தமிழர் உணர்ந்திருந்ததை உணரமுடிகிறது.

யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

குறுங்கோழியூர் கிழார் இவனது சிறப்புகளைப் பாடியுள்ளார். இணைத்துப் பார்த்துக்கொள்ளலாம்.

குறுந்தொகை 166

  • நெய்தல் திணை
மாந்தை ஊரில் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர் இல்லாமல் தனியாக இருப்பதுதான் புலம்ப வைக்கிறது - என்கிறாள் தலைவி.

மாந்தை ஊர்

கடலலை பெயர்ந்து வரும்போது நாரைகள் கூட்டமாகப் பறந்துவந்து அயிரை மீன்களை உண்டு களிக்கும் ஊர் மாந்தை.

குறுந்தொகை 167

  • திணை - முல்லை
கடிநகர் = பெண் திருமணம் செய்துகொண்டு வாழும் இல்லம்
  • செவிலித்தாய் கடிநகர் சென்று தன் வளர்ப்பு-மகள் மகிழ்வாக வாழ்வதை அவளைப் பெற்ற நற்றாய்க்கு எடுத்துரைக்கும் பாடல் இது.

தலைவி தன் காந்தள் மெல்விரல்களால் கட்டித் தயிரைத் தாளிக்கப் பிணைகிறாள். அப்போது நன்றாகத் துவைத்து உடுத்திய தன் ஆடையில் கையைத் துடைத்துக்கொள்கிறாள். தாளிக்கும்போது புகை கிளம்புகிறது. தன் முன்தானையால் கண்ணைப் பொத்திக்கொள்கிறாள். அவளே புளிக் கட்டுச்சோறும் சமைக்கிறாள். அவளது கணவன் அந்தப் புளிக் கட்டுச்சோற்றைத் தாளித்த தயிரில் தொட்டுக்கொண்டு 'இனிமையாக உள்ளது' என்று சொல்லிக்கொண்டே உண்கிறான். அதனைப் பார்த்து தலைவியாகிய அவளது மகளின் முகம் மகிழ்ச்சியில் பூரிக்கிறது. - இதுதான் அங்குள்ள நிலை என்கிறாள் செவிலி.

குறுந்தொகை 214

தலைவனுக்காக ஏங்கி வாடும் தலைவியின் மேல் முருகு ஏறிக்கொண்டது என்று சொல்லி வெறியாட வைக்கிறார்கள். அப்போது தோழி உண்மையை எடுத்துரைக்கிறாள்.

மரங்களை வெட்டிச் சாய்த்துக் கானவன் தினை விதைத்தான். அதற்குக் காவல் புரிய அவனது மகள் சென்றாள். அவளது இடுப்புக்கு அழகாக அன்று அவன்(தலைவன்) தழையாடை தைத்துத் தந்தான். அதனை அணிந்த அவளுக்கு இன்று அரலை மாலை சூட்டுகிறீர்களே! தகுமா? - எனகிறாள் தோழி.

வழக்கம்

வெறியாட்டு நிகழும்போது வெறியாடவைக்கும் பெண்ணுக்கு அரலை மாலை (அரலிப் பூ மாலை) சூட்டுவர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.