குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)

உலகப் பன்னோக்கு என்னும் பொருளில் செய்திகளைக் கூறுவது குவலயானந்தம் (குவலயம்+அனந்தம்). குவலயானந்தம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன. ஒன்று வாதவூரார் என்பவரால் இயற்றப்பட்டது. மற்றொன்று அப்பைய தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது.

இக்கட்டுரையில் அப்பைய தீட்சிதரின் குவலயானந்தம் பற்றிய செய்திகள் தொகுக்கப்படுகின்றன.

வாதவூராரின் நூல் நூற்பா எனப்படும் சூத்திர யாப்பால் அமைந்தது. இந்த நூல் கட்டளைக்கலித்துறை என்னும் யாப்பால் அமைந்தது. இடையிடையே ஈரடிப் பாடல்களும் வருகின்றன. இதில் 154 பாடல்கள் உள்ளன.

இந்தப் பாடல்கள் அனைத்தும் அணியிலக்கணம் பற்றியவை.

  • முதல் பாடல் அம்பிகைக்கு வணக்கம் சொல்கிறது.
  • ‘தென் இளசைத்தவனே’ (7) ‘இளசைக் குமாரெட்ட பாண்டியனே’ (150) ‘எட்டதளத்து அரசே’ (86) என்று முடியும் பாடல்களால் இந்த நூல் இயற்றியவரைப் பேணியவன் யார் என்பது தெரியவருகிறது. அவனது பெயர் சீதரன் என்று மற்றொரு பாடல் (57) குறிப்பிடுகிறது.
  • தற்குறிப்பு-அணியை இந்த நூல் ஒளிப்பு எனக் குறிப்பிடுகிறது. அத்துடன் ஐந்து வகையான ஒளிப்பு-அணியை இது குறிப்பிடுகிறது.
  • இயல்பு-நவிற்சி-அணியை இந்நூல் ‘சிலேஷை’ (56) எனக் குறிப்பிடுவதால் ஆசிரியரின் போக்கு எத்தகையது என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.

அப்பைய தீட்சிதரின் சரித்திரத்திலிருந்து

ஐதராபாத்திலிலுள்ள 'அப்பைய தீட்சிதேந்திர கிரந்தாவளி பிரகாசன சமிதி' என்ற ஒரு நூலகத்தாரல் 1972இல் வெளியிடப்பட்டு, முனைவர் என். ரமேசன் என்பவரால் (ஆங்கிலத்தில்) எழுதப்பட்ட 'ஶ்ரீ அப்பைய தீட்சிதர்' என்றநூலில், தீட்சிதரின் 104 நூல்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. அவைகளில் 'குவலயானந்தம்' பற்றி உள்ள குறிப்பு:

'அர்த்தாலங்காரத்தை' கற்பிக்கும் நூல் இது. அலங்கார சாத்திரத்தில் இது ஒரு பிரசித்தமான ஏற்புடைய நூல். இவருக்கு முன்னால் இத்துறையில் இருந்த நூல்களையெல்லாம் அலசி, தேர்ந்து திருத்தியமைக்கப்பட்ட நூல்.முழுநூலும் மனதுக்குப் பிடித்தமாகவும் விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் எழுதப்பட்டது. சில புது அணிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அணிகளைப் பற்றிப் படிப்போர் முதன்முதலில் படிக்கவேண்டிய நூல்.இதற்கு 'சந்திரிகா' (நிர்ணயசாகரா அச்சகம், மும்பை), 'ரசிக ரஞ்சனி' என்ற இரண்டு விளக்கவுரைகள் உள்ளன. 'ரசிக ரஞ்சனி' ஹாலாஸ்யநாத சாஸ்திரியாரால் கும்பகோணத்திலிருந்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

கருவிநூல்

தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன் பதிப்பாசிரியர், மெய்யப்பன் பதிப்பக வெளியீடு, 2007
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.